Sunday, 4 October 2015

மச்சமுனி ஐயா

சித்தான சித்து முனி மச்சனப்பா
சீருலகில் நெடுங்காலம் மிகுந்த சித்து
சத்தான திரேகமதை நம்பாமல் தான்
தாரனியிலிருந்த தொரு தனத்தை எல்லாம்
நித்தியமும் அகதிகட்கு அன்னந் தந்து
நிட்களங்க நிடேத வழி தெரிந்துமே தான்
பக்தியுடன் னம்பாளின் தரிசனாத்தால்
பாருலகை மறந்ததொரு சித்தனாமே"

- அகத்தியர் 12000 -

ஆடி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தார் மச்ச முனி. குருவருளால் எண் வகை மகாசித்திகளையும் பெற்றார். உலக ஆசை அற்றவரான இவர் தன் சொத்தையெல்லாம் விற்று ஏழை பரதேசிகளுக்கு அன்னதானம் செய்தார் என்று அகத்தியர் நூல் கூறுகின்றது. 

   இவர் காக புசுண்டரின் சீடராவார். மச்சமுனி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும்  மச்சமுனியின்  பிறப்பு மிக விசேஷமானது. தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக் கேட்டபடி இருந்த உமா தேவிக்குக் கண்ணயர்ச்சி ஏற்பட்டு உறக்கம் வந்து விட்டது. ஆனால், தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று, அதைக் கேட்டபடி இருந்தது. மீனுக்கு ஏது காது?அதற்கு ஏது மொழியறிவு? அதனால் எப்படிக் கேட்க முடியும்? _ என்ற கேள்விகள் எல்லாம் இன்றைய விஞ்ஞான பாதிப்பு நமக்குள் மூட்டுபவை. ஆனால் இந்த சம்பவங்களை அன்றைய நாளில் எழுதி வைத்தவர்கள், இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்கத் தெரியாதவர்கள் அல்லர். ஆனால், அவர்களுக்கெல்லாம் பிறர் கூற வேண்டிய அவசியமே இன்றி இதற்கெல்லாம் விடைகள் தெரிந்திருந்தன. எங்காவது பட்சிகள் பேசினால், நாகங்கள் காவல் பணிகளில் இருந்தால் அவை, பட்சி வடிவம் கொண்ட ஒரு தேவன் என்றோ தேவதை என்றோதான் கருதினார்கள். அவர்கள் வரையில் அவ்வாறு பட்சியாகவும் நாகமாகவும் தேவர்கள் இருக்க நிச்சயம் ஒரு காரணம் இருந்தது. அந்தத் திருக்குளத்து மீனும் கூட மீன் வடிவத்தில் இருந்த ஒரு தேவதை போலும்... அந்த தேவதை மீனின் வயிற்றில் ஒரு குஞ்சு மீன்! அந்த மீன், கொடுத்து வைத்த மீன். 

                          கருவில் திருகொண்ட மீன். உலக நாயகன், உலகநாயகிக்குக் கூறிய உபதேச மொழிகளை முழுவதுமாகக் கேட்க கொடுத்து வைத்திருந்த மீன் அது. ‘என்று ஒரு தேவ குரலை அது செவி மடுக்கிறதோ, அன்று அதற்கு சாபவிமோசனம்’ என்று இருந்திருக்க வேண்டும். அந்தக் குஞ்சு மீன், ஒரு பாலகனாய் மாறி உமாதேவன் முன்னால் காலை உதைத்துக் கொண்டு அழுதது. தாய்மீனும் மானிட வடிவம் கொண்டு ஓடிவந்து அணைத்துக் கொண்டு, அப்படியே உலக நாயகன் நாயகி காலில் விழுந்தாள். மச்சமாய் இருந்து, இறை உபதேசம் கேட்டு பிறந்ததால் மச்சேந்திரநாதன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. கூடவே, அந்த ஈஸ்வரனின் பரிபூர்ண கிருபா கடாஷமும் மச்சேந்திரனுக்குக் கிட்டியது! இப்படி பிறக்கும் போதே சித்த நிலை கொண்டு பிறந்தவர் மச்சேந்திரர் என்கிற மச்சமுனி. 

கபால தீட்சை 
மச்ச முனிவர் தனது “மச்சமுனி திருமந்திரம்800” நூலில் குறிப்பிட்டுள்ள மற்றொரு தீட்சை முறையினை இன்று பார்ப்போம். இந்த தீட்சை முறைக்கு “கபால தீட்சை” என்று பெயர். இதனை தன் நூலில் பின்வருமாறு மச்சமுனி குறிப்பிடுகிறார்.சென்றிடுங் கபால தீட்சையைக் கேட்டிடு 
 நின்ரிடு மூச்சியில் நினைவாய் றீம்என்றும் 
 சென்றிடு நெற்றியில் சுருள ஓம்என்றிடு 
 கன்றிடு கண்டத்தில் கலந்த அங்கென்றிடே"  
- மச்சமுனி - 
 மங்கென்று மார்பி லமர்ந்திடு சிங்கென்று 
 வங்கென்று உந்தியில் வணங்கி யிருந்திடு 
 சிங்கென்று மூலந் திறந்து வலுத்திடும் 
 பொங்கும் கபாலம் பொருந்திய தீட்சையே"  
- மச்சமுனி - 
 சாதகரின் உச்சியில் "றீம்" என்ற மந்திரத்தினையும்,புருவ மத்தியில் "ஓம்" என்ற மந்திரத்தினையும்,கண்டத்தில் அதாவது தொண்டையில் "அங்" என்ற மந்திரத்தினையும், மார்பில் "மங்" என்ற மந்திரத்தையும்,நாபியில் "சிங் வங்" என்ற மந்திரத்தையும் உணர்ந்து தியானிக்க மூலம் திறக்கும் என்கிறர். இதுவே கபால தீட்சை ஆகும்.  இந்த கபாலதீட்சையினால் விளைவது என்ன?, அதனை பின்வருமாறு விளக்குகிறார். 
 பொருந்திய தீட்சையைப் புனிதம தாக 
 வருந்து யெந்நாளும் வணங்கி யிருந்திடு 
 திருந்திய தேகஞ் சிவகயி லாசமாம் 
 இருந்திடு மந்த ஏகாந்த மாகவே" 
  - மச்சமுனி - 
 ஆகமா யந்த அருள்சிவ சக்தியை 
 பாகமாய் நீயும் பணிந்து வணங்கியே 
 ஏகமாய் நின்று இணங்கிய தீட்சையை 
 தாகமாய்ச் சொல்லி சாத்து வீபூதியே" 
 - மச்சமுனி - 
 மேலே சொன்ன கபாலதீட்சையை மனதால் உணர்ந்து தினமும் தியானித்து வந்தால் தியானிப்பவர் உடலானது கைலாசம் போல் ஏகாந்தமாய் நிற்குமாம். இவ்வாறு எகாந்தமாய் இருக்கும் உடலுடன் சிவ சக்தியை பணிந்து வணங்க வேண்டுமாம்.   மேலும் தினமும் இந்த கபால தீட்சையை மனதால் உணர்ந்து தியானித்து வரும் வேளையில், தியானம் முடிவடைந்ததும் தீட்சையின் பலன் உடலில் தங்க வேண்டும் என்று ஒருமனதாய் வேண்டி வீபூதியை சாத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். 
 மச்சமுனி...  

மச்சமுனி சூத்திரம் 21 
மச்சமுனி தூல சூக்கும காரண ஞானம் 30
மச்சமுனி பெரு நூல் காவியம் 800 
 மச்சமுனி வைத்தியம் 800 
 மச்சமுனி கடைக் காண்டம் 800 
 மச்சமுனி சரக்கு வைப்பு 800 
 மச்சமுனி திராவகம் 800 
 மச்சமுனி ஞான தீட்சை 50 
 மச்சமுனி தண்டகம் 100 
 மச்சமுனி தீட்சா விதி 100 
 மச்சமுனி முப்பு தீட்சை 80 
 மச்சமுனி குறு நூல் 800 
 மச்சமுனி ஞானம் 800 
 மச்சமுனி வேதாந்தம் 800 
 மச்சமுனி திருமந்திரம் 800 
 மச்சமுனி யோகம் 800 
 மச்சமுனி வகாரம் 800 
 மச்சமுனி நிகண்டு 400 
 மச்சமுனி கலை ஞானம் 800 
 ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும், 
இத்துடன் இவர் மாயாஜாலங்களைப் பற்றி எழுதிய  மாயாஜால காண்டம் என்னும் நூலும் உள்ளதாக சொல்லப்படுகிறது. 
 இவர் சமாதி குறித்து முரணான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன, 
திருப்பரங்குன்றத்தில்  சாமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், 
மற்றயது திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும்  கூறப் படுகின்றது.  

No comments:

Post a Comment