Sunday, 11 October 2015

சுந்தரானந்தர்

 

சுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அகமுடையார் குலத்தில் பிறந்தார் என போகர் தெரிவிக்கிறார். யோகத்தில் நீண்ட காலம் அமர்ந்திருந்து சித்துக்கள் பல புரியும் ஆற்றல் பெற்றுள்ளார். அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார். இவரின் குரு சட்டை முனி என்று சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.

அபிஷேக பாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில் சச்சிதானந்த வடிவாகிய சுந்தரானந்த சித்தர் மதுரையம்பதி கடை வீதி, சித்திரக்கூடம், நாற்சந்தி வீதி, உப்பரிகை போன்ற இடங்களில் திரிந்து பல சித்துக்களை விளையாடினார். இந்திரஜாலமாக மறைந்தும், பெண்ணை ஆணாக்கியும், ஆணை பெண்ணாக்கியும், ஊனமுற்றவர்களை சுகப்படுத்தியும், இரும்பு, செம்புகளை தங்கமாக்கியும் பற்பல ஜாலங்கள் புரிந்திருக்கிறார். இதைக் கண்டு அதிசயித்த மக்கள் மன்னனுக்கு செய்தியை தெரிவித்தனர். மன்னன் சித்திரை அரண்மனைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார். ஆனால் சித்தரோ அரசனை தன்னை வந்து பார்க்கும் படியாகச் சொல்லியனுப்பினார்.

சித்தரை சந்திக்க அரசர் ஆவலோடு வந்தார். சித்தரிடம் ஊர், பேர் முதலியவைகளைக் கேட்க தாம் பல சித்து விளையாட்டுகளை செய்து காட்டும் சித்தரெனக் கூறினார். அப்போது கையில் கரும்புடன் ஒருவன் வந்தான் அதைக்கண்ட அரசர் அக்கரும்பை வாங்கி சித்தரிடம் கொடுத்து “இக்கரும்பை இங்கு கற்சிலையாக நிற்கும் கல்யானையை உண்ணும்படிச் செய்தால் நீங்கள் சித்தர் என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்றார். சித்தரும் சம்மதித்து கரும்பை கையில் வாங்கி கல் யானையிடம் நீட்டி கண்ணசைத்தார். அனைவரும், அரசரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கல்யானை துதிக்கையை நீட்டி கரும்பை வாங்கி உண்டு ஏப்பம் விட்டு பிளிரியது. அரசனும் அனைவரும் அதிசயித்து அன்பும், பக்தியும் பெருக்கெடுக்க சித்தர் திருவடிகளில் வணங்கினர். நிமிர்ந்த போது யானை மறுபடியும் கல்யானையாக காட்சியளித்தது. சித்தரும் கோவிலுக்குள் சென்று மறைந்தார். இவர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சித்த்தராக சமாதியில் வீற்றிருக்கின்றார்.

No comments:

Post a Comment