Saturday, 10 October 2015

சட்டை முனி சித்தர்

ஒருவருக்கு யார் உதவி இருந்தால் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடுவார்கள்.? அரசியல்வாதிகளின் ஆதரவா?அல்லது நோய்களில் இருக்கும் போது மருத்துவர்களின் உதவியா? வழக்கு தொல்லை இருக்கும் போது வழக்கறிஞரின் உதவியா? இவர்களுக்கெல்லாம் மேலே ஒருவர் இருக்கிறார். ஆம். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. அந்த தெய்வம் துணை இருந்தால் ஒருவருக்கு எந்த பழி பாவம் வந்தாலும் அவர்களுக்கு தெய்வமே துணை வருவார் பிரச்னையும் விடுப்படும்.   பாவ-புண்ணியங்களில்  நம்பிக்கையில்லாமல் கொடுமை செய்கிற, கொடுமைக்கு துணை போகிறவர்களை எப்போது-எப்படி நல்வழிக்கு மாற்ற வேண்டும் என்று இறைவனுக்கு தெரியும். காக்கைக்கு கூட உணவை வைக்காத கஞ்சனிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு அந்த கஞ்சனே தன்னை அறியாமலே உதவி செய்ய வைக்கும் குணத்தை கொடுத்து விடுவார் இறைவன். இப்படி எதையும் எப்படியும் மாற்றுகிற ஆற்றல் கொண்டவன்தான் இறைவன். நீதியின் கண்கள் மறைக்கப்பட்டாலும் இறைவனின் கண்களை மறைக்க முடியாது. கள்வன் என்று குற்றம்சாட்டப்பட்ட சித்தர் ஒருவருக்கு இறைவன் துணை நின்று நீதி தந்தான். யார் அந்த சித்தர் என்பதை இப்போது பார்ப்போம்.

ஓம் நமோ நாராயணாய ” என்ற மந்திரத்திற்கு எந்த அளவுக்கு சக்தி இருக்கிறது? அதனின் மகிமை என்னவென்று தெளிவாக கூறினார் ஸ்ரீராமனுஜர். அதை கேட்ட அவருடைய குருநாதருக்கு கோபம் வந்ததுவிட்டது. அதுபோல சட்டை முனி சித்தர் போகரிடமும், கொங்கணச் சித்தரிடமும் சில வித்தைகளை கற்றார். தான் கற்ற வித்தைகளை மற்றவர்கள் தெரிந்த கொள்ளும் விதமாக எளிமையாக எழுதினார். பொதுவாக சித்தர்கள் பரி பாஷையில் வடிவிலும்தான் எழுதுவார்கள். ஆனால் சட்டை முனி சித்தர், எளியோருக்கும் புரியும்படியாக எழுதினார். இதனால் கோபம் கொண்டு சட்டை முனி சித்தர் எழுதிய நூல்களை கிழித்து எறிந்தார் திருமூலர். சட்டை முனியோ அதை பற்றி கவலைபடவில்லை. இதுவும் இறைவனின் செயல் என்று இருந்துவிட்டார். நல்ல மனம் படைத்தவர்களுக்குதான் துன்பங்கள் துரத்தி கொண்டே வரும். அப்படி ஒரு துன்பம் சட்டை முனி சித்தரையும் துரத்தியது. அது என்ன?   அரங்கன் கோயில் கதவு தானாக திறந்தது   சட்டைமுனி ஊர் ஊராக சென்று எண்ணற்ற ஆலயங்களை தரிசித்தார். இப்படி ஒவ்வாரு ஊரில் இருக்கும் ஆலயங்களை தரிசித்து வந்து கொண்டு இருக்கும் போது, வெகு தூரத்தில் திருவரங்கம் கோயில் கலசத்தை கண்டார். “அட அரங்கனை தரிசிக்க வேண்டுமே” என்ற ஆவலில் திருவரங்க பெருமாளை  தரிசிக்க தன்னுடைய நடையில் வேகத்தை செலுத்தினார். இருந்தாலும் நள்ளிரவு பூஜை முடிந்துவிட்டது. ஆலயத்தின் கதவு சாத்தபட்டது. ஆலய கதவு சாத்தி இருப்பதை கண்ட சட்டைமுனி மனம் வருந்தினார். “அரங்கா உன்னை காண விரைந்தோடி வந்தும், என்னால் உன்னை தரிசிக்க முடியவில்லையே” என்று வருந்தினார். இந்த வார்த்தை கேட்ட அடுத்த நொடியே ஆலயத்தின் கதவுகள் சலசலவென  மணி ஓசையுடன் திறந்தது. ஆலயமே முழுவதும் தீப வெளிச்சம் சட்டை முனி சித்தரை வரவேற்றது. அதை கண்ட சட்டைமுனி மகிழ்சியடைந்து அரங்கனின் கருவரைக்குள் சென்று அமைதியாக தியானத்தில் அமர்ந்தார். திருவரங்க ஆலய கதவு திறப்பதின் ஒசை கேட்ட அக்கம் பக்கத்தினரும் ஊர்மக்களும் அரங்கன் ஆலயத்தில் திரண்டார்கள். ஆலயத்தின் கதவு திறந்திருப்பதையும், கருவரைக்குள் யாரோ ஒருவர் அரங்கனின் உடலில் இருந்த நகைகளை தன் உடலில் அணிந்திருப்பதையும் கண்டு, “கள்வன் ஒருவன் கோயிலுக்குள் நுழைந்து நகையை திருடிவிட்டான். மாட்டி கொள்வோமோ என்று பயந்து தவத்தில் இருப்பது போல நடிக்கிறான்.” என்று கூறி சட்டை முனி சித்தரை அடி அடி என்று அடித்துவிட்டார்கள் ஊர்மக்கள். அத்துடன் அரசரிடம் இழுத்து சென்றார்கள். கம்பளிச் சட்டை முனி “நீ யார்? எந்த ஊர்?” என்றார் அரசர். “நான் சட்டை முனி“ என்றார் சித்தர். “நீ சட்டைமுனியா? நிச்சயமாக இருக்க முடியாது. அவரை பற்றி நான் கேள்விப்ட்டு இருக்கிறேன். சிவபெருமானின்  சிவபெருமானின் சிறந்த பக்தர் அவர். மாபெரும் சித்தர். கயிலாய மலையின் குளிர் தாங்காமல் இருந்தபோது ஈசனால் கம்பளிச் சட்டை தரப்பட்டது.  அவர் எங்கு சென்றாலும் கயிலாயநாதர் தந்த கம்பளி சட்டையுடன் செல்லும் வழக்கம் கொண்டவர். அதனால் அவருக்கு கயிலாய கம்பளிச்சட்டை முனி என்ற பெயரும் உண்டு அத்துடன் தவத்தின் பேரில் கயிலைக்குப் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தவர் என கேள்விபட்டு இருக்கிறேன். அப்படி உயர்ந்த ஒருவரின் பெயரை சொல்லி தப்பிக்கவா பார்க்கிறாய்?“ என்று கோபம் கொண்டார் அரசர். “அரசரே ஆத்திரம் வேண்டாம். புத்தியை மறைக்கும் கோபத்தால் எடுக்கும் முடிவும் பாதகமாகும் என்பதை நீ அறியாதவன் அல்ல” என்று அமைதியாக புன்னகையுடன் கூறினார் சித்தர். “ஒரு திருடன் நீ, எனக்கே உபதேசம் செய்கிறாயா? அதுவும் அரங்கனின் ஆலயத்தில திருடிவிட்டு எதுவும் அறியாதவனாக இருக்கிறாயே? என்ன நெஞ்சழுத்தம்?” என்றார் அரசர்.   “அரசனே அமைதியாக இரு. வேண்டும் என்றால் என்னுடன் வா. அரங்கனிடமே கேள் நான் கள்வனா என்று” என்றார் சட்டை முனி. “சரி அதையும்தான் பார்க்கிறேன்.” என்று கூறிய அரசர், சட்டை முனியை எல்லோரும் பார்க்கும் படியாக ஒரு திருடனை அழைத்து செல்வது போல் இரும்பு சங்கலியால் கட்டி கோயிலுக்கு இழுத்து வந்தார்கள் காவலர்கள். திருவரங்கம் ஆலயத்தின் முன் நிறுத்தப்பட்டார் சித்தர். “அரங்கா… நீ எனக்கு அணிவித்த நகையை நான் திருடி அணிந்துக்கொண்டேனாம். என்னை கள்வன் என்கிறார்கள். அரங்கா.. அரங்கா..  அரங்கா…” என்று மூன்று முறை அரங்கனை அழைத்தார் சட்டை முனி.

அப்போது கோயிலுக்குள் இருந்து மணியோசை ஒலித்தது. மேளதாளங்கள் ஒலித்தது. கருவரையில் அரங்கன் அணிந்திருந்த நகைகள் தானாக கருவரைக்குள் இருந்து வெளியேறி, கோயிலின் வாசல் வழியாக வெளியே வந்து சட்டை முனி சித்தரின் கழுத்தில் விழுந்தது. அரங்கனின் நகைகள் சட்டை முனி சித்தரை அலங்கரித்தது. அப்போது திருவரங்கநாதன் சட்டைமுனி அருகில் காட்சி தந்தார். இந்த அற்புத காட்சியை கண்ட அரசரும் ஊர்மக்களும் மெய்சிலிர்த்து போனார்கள்.  உண்மையை உணர்ந்தார்கள்.   “உன் அருமை தெரியாதவர்களின் அருகில் கூட நிற்க வேண்டாம். இனி நீ என்னுடனும் சிவபெருமானுடனும் இருப்பதே நல்லது.” என்று எண்ணினாரோ  என்னவோ, சட்டைமுனிவர் இறைவனுடன் ஒளிவடிவமாக இரண்டறக் கலந்தார். பிறவி இல்லா வரத்தை பெற்றார். இறைவனை நம்பினால் ஆபத்தில் இருந்தாலும் அவனே முன் வந்து காப்பார். . விளையாடுவதும் அவன்தான், நம்மை ஆட்டுவிப்பதும் அவன்தான். இறைவனை நம்பி எடுக்கம் முயற்சி யாவும் வெற்றியாக அமையும். முதலில் வெற்றி பெற தேவை முழுமையான நம்பிக்கை. அந்த நம்பிக்கையே வெற்றிக்கு பாதையாக அமையும். அந்த பாதையும் இறைவன் காட்டிய பாதையே. அந்த பாதையில் நம் பயணத்தில் இறைவன் நிழல் போல நம்முடன் வந்து நல்ல அந்தஸ்தில் சேர்ப்பார்.  

No comments:

Post a Comment