Thursday, 29 October 2015

அகப்பேய் சித்தர்

 திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளாசையை தேடி அலைந்தது.

மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் திரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக்கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரிய பல மந்திர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்தரை வாழ்த்திவிட்டு வியாசர் மறைந்தார். மனிதர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும், தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் “அகப்பேய் சித்தர் பாடல்கள் 90” என்ற நூலை இயற்றினார்.

“அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நஞ்சுண்ணவும் வேண்டாம் நாதியற்றுத் திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான்”, என்பது இவரின் வாக்கு.

” சக்கரையம்மா என்னும் பெண் சித்தர் ” …

நமது சுதந்திரப் போராட்ட காலத்தில், சக்கரையம்மா என்ற பெண்சித்தர், வானில் பறவைபோல பறப்பதைப் பலரும் பார்த்து வியந்திருக்கிறார்கள். தமிழறிஞரான திரு.வி.க. தாம் எழுதிய “உள்ளொளி’ என்ற புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
“சென்னையில் கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். மானுடம் பறக்கிறது என்றால் விந்தையல்லவா?’
விண்ணில் பறக்கும் சக்தியுடன் திகழ்ந்தாரே, யார் இந்த சக்கரையம்மா…?
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த தேவிகாபுரம் என்ற சிற்றூரில் 1854 இல் பிறந்தாள் ஆனந்தாம்பா என்ற தெய்வீக பெண்.
அந்த ஊரில் புகழ்பெற்ற பெரியநாயகி ஆலயம் உண்டு. அந்த ஆலயத்தின் மேற்கு மூலையில், தேவியின் மூல விக்கிரகத்தை தரிசித்தவாறு, மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்திருப்பாள் சிறுமி ஆனந்தாம்பா.
ஆனந்தாம்பாவாகப் பிறந்திருப்பது யார்? அவள் இந்த உலகத்தப் பெண்ணா, இல்லை வானுலகத்துக்கு உரிமையானவளா? தேவியின் வடிவம் தானா அவள்? அந்த மூல விக்கிரகத்தில் அவள் எதை பார்க்கிறாள்? தன்னைத்தானே தரிசித்துக் கொள்கிறாளா? யார் அறிவார்?
அவளது வீடே கோயிலின் அருகில் தான் இருந்தது! அவள் தந்தை சேஷ குருக்கள் கோயில் அர்ச்சகர்களில் ஒருவர். குருக்களின் புதல்வி என்பதால் ஆலயத்திற்கு அவளால் எப்போது வேண்டுமானாலும் போக முடிந்தது. தியானத்தில் மணிக்கணக்கில் தோய்ந்திருக்கவும் முடிந்தது.
அவள் வயதுடைய சிறுமிகள் பல்லாங்குழியிலும், பாண்டியிலும் பொழுது போக்கிய காலங்களில் அவள் மட்டும் தன் நேரம் முழுவதையும் தியானத்திற்கே அர்ப்பணித்தாள்.
அக்கால வழக்கப்படி, அவளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. கணவன் சாம்பசிவம் 24 வயதுப் பையன். சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் சட்டநாத மடம் என்றொரு மடம் இருந்தது. (கோமளீஸ்வரன் பேட்டை இப்போது புதுப்பேட்டை எனப்படுகிறது). சட்டநாத மடத்தின் உரிமையாளன் அவன்தான். ஏற்கெனவே திருமணமாகி மனைவியை இழந்த அவனுக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கை பட்டாள் ஆனந்தாம்பா.
ஆனந்தாம்பாவை அவன் ஒரு வேலைக்காரிபோல் நடத்தினான்.
சட்டநாத மடத்தின் அருகில் கோமளீஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில் இருந்தது. தற்போதும் கோயில் இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அங்கே போய் சிவன் சன்னதியில் அமர்ந்துகொள்வாள் ஆனந்தாம்பா. பிறந்த வீட்டில் அவளுக்கு அடைக்கலம் தந்தவள் தேவி கோயில் பராசக்தி என்றால் புகுந்த வீட்டில் அடைக்கலம் தந்தவர் சிவபெருமான்!
பெண்பித்துப் பிடித்து பல்வேறிடங்களில் அலைந்த சட்டநாதன் பெருவியாதி பிடிக்கப்பட்டு முப்பத்தைந்தே வயதில் காலமானான். ஆனந்தாம்பாவுக்கு அப்போது வயது இருபது.
அக்கால வழக்கப்படி, அவளுக்கு முடி மழித்து முக்காடு போட்டார்கள். அழகுக் கோலம் அலங்கோலமாக மாற்றப்பட்டதை ஆனந்தாம்பா பொருட்படுத்தவில்லை. அவளுக்கு தன் உடல்பற்றிய பிரக்ஞையே இருந்ததில்லை. கணவன் காலமானது அவளைப் பொறுத்தவரை அவளின் ஆன்மிக வாழ்வுக்கு ஒரு வாய்ப்பே ஆயிற்று.
தேவிகாபுரத்தில் சிறிதுகாலம் இருந்த அவள், அதன்பின் திருவண்ணாமலை அருகே போளூரில் அண்ணன் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். ஆனந்தாம்பா சக்கரையம்மாவாக மாறிய பரிணாம வளர்ச்சி நடந்தது அங்குதான். எண்ணற்ற ஆன்மிக அனுபவங்களை அவளுக்கு வாரி வழஙகியது அவ்வூர்.
அங்கே அருகிலிருந்த நட்சத்திரக் குன்றில் நட்சத்திர குணாம்பா என்ற உயர்நிலைத் துறவினி ஒருவர் வாழ்ந்து வந்தார். நட்சத்திர குணாம்பாவைச் சந்தித்தபின் ஆனந்தாம்பாவின் வாழ்க்கையே மாறிப் போயிற்று. அவளை சிஷ்யையாக ஏற்றார். இறைச்சக்தியைத் தேவி வடிவில் மந்திர ரூபமாக வழிபடும் ஸ்ரீ சக்ர உபாசனையைக் கற்றுத் தந்தார்.
அந்த உபாசனையை மேற்கொண்டதால் தான் பின்னால் ஆனந்தாம்பா ஸ்ரீ சக்ர அம்மா என அழைக்கப்பட்டார். அதுவே பொது மக்களின் வாய்மொழியில் மருவி சக்கரையம்மா ஆயிற்று.
“நான் மீண்டும் சென்னைக்கு, என் புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டுமே? என குருவான உங்களை இனி அடிக்கடிச் சந்திப்பது எவ்விதம்?’ என்று சக்கரையம்மா உருகிக் கரைந்தபோது குணாம்பா கனிவோடு அவரைப் பார்த்தார்.
“அதுபற்றிக் கவலைப்படாதே’ என்று லகிமா என்ற ஓர் ஆன்மிக ஸித்தி அவருக்கு ஏற்படுமாறு செய்தார். லகிமா என்பது உடலை மிக லேசாக மாற்றிக் கொள்வது. அந்த ஸித்தி அடைந்தவர்களால் விண்ணில் பறக்க முடியும். “இனி எப்போது வேண்டுமானாலும் நீ பறந்துவந்து என்னைப் பார்க்கலாம்’ என அருள்புரிந்தார் குணாம்பா.
மீண்டும் சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் இருந்த தன் புகுந்த வீட்டுக்கு வந்தாள் ஆனந்தாம்பா. மொட்டை மாடி திண்ணையும் அதன் அருகே இருந்த சிறிய அறையும் அவளின் வாசஸ்தங்களாயின.
ஒருநாள் ஸ்ரீசக்ர உபாசனையில் அவள் பேரொளியால் சூழப்பட்டாள். தானே பரம் பொருளாய் ஒளிவீசுவதுபோல் தோன்றியது அவளுக்கு. அளவற்ற ஆனந்தத்தில் கடகடவென்று சிரிக்கலானாள்.
அவளது ஆன்மிக வளர்ச்சியை அறியாத புகுந்த வீட்டார், கணவன் இறந்ததால் அவளுக்குப் பித்துப் பிடித்துவிட்டதென்று கருதினர்.
அக்காலத்தில் டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ் என்ற புகழ்பெற்ற ஒரு மருத்துவர் இருந்தார். ஏழைகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்தவர். உன்னதமான ஆன்மிகவாதி அவர்.
ஒரு சமயம் ஆனந்தாம்பாவின் சகோதரருக்கு உடல்நலம் குன்றியது. மருத்துவம் பார்க்க டாக்டர் நஞ்சுண்டராவை அழைத்தார்கள்.
அவர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது மொட்டை மாடியிலிருந்து வித்தியாசமான அந்தச் சிரிப்பின் முழக்கம் கடகடவெனக் கேட்டது. ஆன்மிகவாதியான நஞ்சுண்டராவ் அந்தச் சிரிப்பால் கவரப்பட்டார்.
யார் உரத்துச் சிரிக்கிறார்கள் என்று விசாரித்தார். கணவனை இழந்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட ஆனந்தாம்பா என்ற பைத்தியத்தின் சிரிப்பு அது என்று அலட்சியமாகக் கூறினார்கள் உறவினர்கள்.
ஆனால், அந்த சிரிப்பு அவரை அழைத்ததுபோல் தோன்றியது. மாடியேறிச் சென்றார். முதுகுப் புறத்தைக் காட்டிக் கொண்ட அமர்ந்திருந்த ஆனந்தாம்பா “மகனே வா!’ என அழைத்தாள்.
தூக்கிவாரிப்போட்டது நஞ்சுண்டராவுக்கு! மனிதர்களுக்கு முதுகில் கண் உண்டா என்ன! மேற்கொண்டு எதுவும் பேசாத ஆனந்தாம்பாளிடம், தானும் எதுவும் பேசாமல் விழுந்த வணங்கிவிட்டு வந்துவிட்டார்.
பின்னொருநாள் கோமளீஸ்வரன் கோயிலுக்குச் சென்றார். ஆலய வாயிலில் அமரந்து கடகடவென்று சிரித்துக் கொண்டிருந்த ஆனந்தாம்பாவை மறுபடி தரிசித்தார். ஒளிவீசும் கண்கள். ஆனந்தாம்பாவின் மேனியிலிருந்து ஓர் அமைதி கலந்த பிரகாசம் பொங்கி வழிவதுபோல் தோன்றியது. நிச்சயம் இவர் பித்துப் பிடித்த பெண்மணி அல்ல என்பதை அவரது அவரது மருத்துவ மனம் உணர்ந்தது.
“ஏன் சிரிக்கிறீர்கள் தாயே?’ என்று பக்தி கலந்த பணிவோடு விசாரித்தார். ஆனந்தாம்பா சிரிப்பை நிறுத்திவிட்டு நஞ்சுண்டராவைப் பார்த்தார்.
“மகனே மனித உடலின் உள்ளே உறைந்திருக்கும் ஆன்மா எப்போதும் ஆனந்தம் நிறைந்தது. இன்ப துன்பங்கள் உடலுக்குத் தானே அன்றி ஆன்மாவுக்கில்லை. நீ உடல் அல்ல. நீ உடலில் உள்ளாய். அவ்வளவுதான். உனது தற்காலிகக் கூடாரமான இந்த உடலைப் பாராமல், கூடாரத்தின் உள்ளே நிரந்தர வஸ்துவாய் வசிக்கும் உன் ஆன்மாவைப் பார்! அப்படிப் பார்க்கத் தொடங்கினால் நிலையான பேரின்பத்தை நீ அடைய முடியும்.’
இந்த வார்த்தைகள் நஞ்சுண்டராவின் உள்ளத்தில் மின்னல் போல் பாய்ந்தன. சொன்ன வார்த்தைகளில் உள்ள பேருண்மை, சொன்னவர் அந்த வார்த்தைகளின் கருத்தை வாழ்வில் அனுசரித்து வாழ்கிறார் என்பதால் அந்த வார்த்தைகளுக்கு ஏற்பட்டிருந்த மந்திர சக்தி.
தன் குரு அவரே என உணர்ந்து ஆனந்தாம்பா என்கிற சக்கரையம்மாவைப் பணிந்தார் நஞ்சுண்டராவ்.
பின்னர் சக்கரையம்மா பற்றி வெளியுலகம் அறிய நஞ்சுண்டராவே காரணமானார். அடிக்கடி சக்கரையம்மாவைச் சந்தித்து உரையாடிப் பயன்பெற்று அவர் சக்கரையம்மாவின் சீடராகவே ஆனார். தம் குருவைப் பல திருத்தலங்களுக்கு நஞ்சுண்ட ராவ் அழைத்துச் சென்றார். திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி பரப்பிரும்மத்தையும் ஸ்ரீரமணரையும் சக்கரையம்மா சந்தித்தார். தன்னை ஆசிர்வதிக்குமாறு சக்கரையம்மா ரமணரிடம் கேட்டபோது ரமணர் மலர்ச்சியோடு அவர் ஏற்கெனவே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டார்.
1901இல் சக்கரையம்மா திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல விரும்பினார். நஞ்சுண்டராவ் அழைத்துச் சென்றார். அப்போது நஞ்சுண்டராவைத் தவிர இன்னும் சிலரும் அவரது சிஷ்யர்களாகியிருந்தார்கள்.
திரும்பி வரும்போது சக்கரையம்மா அந்தப் பகுதியில் அமைந்த ஓர் இடத்தை நஞ்சுண்டராவிடம் குறிப்பிட்டுக் காட்டினார். அந்த நிலத்தை வாங்கி விடுமாறும் தன் உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னபோது வருத்தத்துடன் தலையாட்டினார் நஞ்சுண்டராவ். தம் குரு தம்மை விட்டு சென்றுவிடுவார் என்பதை அந்த சிஷ்யரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. “வருந்தாதே மகனே! நான் சமாதியில் என்றென்றும் இருந்து அனைவருக்கும் அரும்புரிந்து வருவேன். என் சமாதி இருக்குமிடம் அமைதியின் கோயிலாகத் திகழும்!’ என்று சொல்லிச் சீடரை ஆறுதல் படுத்தினார் குரு.
சொன்னபடியே 1901 பிப்ரவரி 28 ஆம் நாள் சக்கரையம்மா உடல் சட்டையை உதறினார். அவரது பொன்னுடல் அவர் குறிப்பிட்ட இடத்திலேயே சமாதி செய்விக்கப்பட்டது. நஞ்சுண்டராவ், சக்கரையம்மா முன்னர் சொன்ன போதே அந்த நிலத்தை வாங்கியிருந்தாரே?
இப்போதும் சென்னையில் திருவான்மியூரில் உறவுகளைத் துறந்து துறவியான பெண் சித்தர் சக்கரையம்மா, தன் சமாதியில் நிரந்தரமாய் வாழ்ந்துவருகிறார். இறந்தது அவர் குடியிருந்த உடல்தானே? அவர் ஆன்மா தன்னை நாடிவரும் அடியவர்களுக்கெல்லாம் அருளை வாரி வழங்கி வருகிறது.

Wednesday, 28 October 2015

கருவூரார் ஐயா

சோழ நாட்டின் கருவூரில் பிறந்த கருவூர்ச்சித்தர், துள்ளி விளையாடும் பருவத்திலேயே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார்.

கருவூராரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொண்டு வாழ்ந்தார்கள்.

ஒரு சமயம் போகர் திருவாவடு துறைக்கு வந்தார். அதையறிந்த கருவூரார் அவரைச் சென்று வணங்கி தம்மை அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.

“கருவூராரே! உன் குல தெய்வம் அம்பாள், தினந்தோறும் அவளை வழிபடு, அவள் உனக்கு வழிகாட்டுவாள்” என்று கூறி வழிபாட்டு நெறிகளை கருவூராருக்கு உபதேசித்தார். போகர் உபதேசப்படி, கருவூரார், உள்ளம் உருகி அம்மனை வழிபட ஆரம்பித்தார். போகரின் வாக்கு பலித்தது. கருவூரார் சித்துக்கள் புரியும் ஞானவானாக உயர்ந்தார்.

கருவூரார், சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார். சித்தரின் இரசவாத வித்தையின் மூலம் உருவான அச்சிவலிங்கங்கள் ஒருமுறை பார்த்தால் செம்பு போலவும், மற்றொரு முறைப் பார்த்தால் பொன் போலவும் தோன்றும். கருவூரார் காசிக்குச் சென்று விசுவநாதர் ஆலயத்திலும் தாமிரத்தில் வேதை செய்து தங்கமயமான லிங்கத்தை உருவாக்கி வைத்தார்.

போகர் தமிழ் நாட்டில் வசித்த காலத்தில் கருவூர் சித்தரும், திருமளிகைத் தேவரும் அவரின் பிரதான சீடர்களாக திகழ்ந்தனர்.

சோழ மன்னன் இரணிய வர்மன் தீர்த்த யாத்திரை புறப்பட்டு பல் புண்ணிய தலங்களை தரிசித்துவிடு தில்லையை அடைந்தார். சிற்றம்பல திருக்குளமான சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடும்போது தண்ணீருக்குள் ஓங்கார நாதம் ஒலித்தது. அரசருக்கு ஆச்சரியம் தாளவில்லை. தண்ணீரை விட்டு வெளியே எழுந்தவுடன் அந்நாதம் கேட்கவில்லை. மீண்டும் நீருக்குள் மூழ்கினார், ஓங்கார ஒலி தெளிவாகக் கேட்டது.

என்ன இது அதிசயம்? மறுபடியும் மூழ்கினார். கண்களைத் திறந்தார். அங்கு ஆடல் வல்லாரின் அற்புத நடனமும் கூடவே ஓங்கார ஒலி; அரசர் வியப்பில் ஆழ்ந்து போய் மீண்டும் மீண்டும் நீரினுள் மூழ்கி அந்நடனத்தையும் ஓங்கார ஓசையையும் கேட்டார். தாம் கண்ட காட்சியை ஓவியமாக வரைந்தார். தான் அனுபவித்த இந்த அற்புத இன்பத்தை உலகிலுள்ள அனைவரும் கண்டு அனுபவிக்க வழியை யோசித்தார். இறுதியில், தான் கண்ட வடிவத்தை மிகவும் தூய்மையான சொக்கத் தங்கத்தில் விக்ரகமாகச் செய்து பொன்னம்பலத்தில் எல்லோரும் தரிசனம் செய்யும்படி அமைக்க வேண்டுமென முடிவு செய்தார்.

“கலப்படமில்லாத சொக்கத்தங்கத்தில் உருவாக்க வேண்டும். செம்போ அல்லது வேறு எந்த உலோகமோ கடுகளவும் சேர்க்காமல் நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று சிற்பிகளிடம் கூறினார்.

ஆனால் சிற்பிகள் என்ன முயன்றும் விக்கிரகத்தை முடிக்க முடியவில்லை. ஏதேனும் ஒரு வகையில் விக்கிரகத்தில் குறைவு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

மன்னர் கொடுத்த கெடுவில் நாற்பத்தேழு நாட்கள் பலனில்லாமல் போய்விட்டன.

தில்லையில் நடராசர் திருவுருவம் அமைக்கச் சிற்பிகள் வருத்தப்படுகிறார்கள் என்ற விவரத்தை அறிந்த போகர், தமது பிரதான சீடரான கருவூராரை அழைத்து, “கருவூரா! அந்த விக்கிரகம் செய்ய வேண்டிய வழிமுறைகளை நான் உனக்கு சொல்கிறேன். நீ போய் செய்து முடி” என்று சொல்லி கருவூராருக்கு வழிமுறைகளை அறிவித்து வழியனுப்பினார்.

நாற்பத்தெட்டாவது நாள் சிற்பிகளுக்கு மன்னர் கொடுத்த கடைசி நாள். சிற்பிகளெல்லோரும் சொல்லவியலாத துன்பத்தில் இருந்தனர்.

மரண பயத்தில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் முன்னிலையில் கருவூரார் போய் நின்றார்.

“கவலைப்படாதீர்கள், மன்னரின் விருப்பப்படியே ஆடல் வல்லாரின் விக்கிரகத்தை நான் செய்து தருகிறேன்” என்று சிற்பிகளுக்கு ஆறுதல் கூறினார். சிற்பிகளோ “தேர்ந்த சிற்பிகளான எங்களாலேயே முடியாத போது உம்மால் எப்படி முடியும்?” என்றார்கள். “என்னால் முடியும். அதுவும் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே”, என்றார் கருவூரார்.

விக்கிரகம் செய்வதற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டார்.

சிற்பிகள் நம்பமுடியாமல் வெளியே காத்திருந்தனர். ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கதவு திறந்து கருவூரார் வெளியே வந்து, “போய்ப் பாருங்கள், உங்கள் எண்ணப்படியே விக்கிரகம் முடிந்து விட்டது” என்று சொன்னார்.

நம்ப முடியாத ஆச்சரியத்தில் சிற்பிகள் உள்ளே நுழைந்தனர். அங்கு கருவூராரால் வடிவமைக்கப்பட்ட அம்பலக் கூத்தனின் அழகு திருமேனி உருவம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெளியே வந்த சிற்பிகள் கருவூராரை வணங்கினர்.

மறுநாள் சூரியோதயத்திற்கு முன்னரே இரணிய வர்மன் நீராடி திருநீற்றுக்கோலத்துடன் சிற்பிகள் இருந்த இடத்திற்கு வந்தார்.

அங்கு இருந்த நடராசர் சிலையின் அற்புத அழகில் மயங்கினார். சிலையின் ஒளியில் அவர் கண் கூசியது. “இறைவா! நீ இங்கு எழுந்தருளிய கோலம் தான் என்னே!” என்று வியந்தார். அங்கம் அங்கமாகத் தங்கச் சிலையை பார்த்து வியந்தார். தான் வரைந்த ஓவியத்தில் இல்லாத அருள்சக்தி விக்கிரகத்தில் இருப்பதை உணர முடிந்தது. அவர் முகத்தில் மகிழ்ச்சி அதிகரித்தது. சிற்பிகள் பக்கம் திரும்பிய மன்னர், ‘அபாரம்! அற்புதமாகச் செய்து விட்டீர்கள் உங்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப் போகிறேன்” என்றார். அப்போது மந்திரி, “மன்னா! சிலையிலிருக்கும் தங்கத்தை சோதித்த பின்னர் இவர்களுக்கு வெகுமதி கொடுக்கலாமே!” என்றார். அதைக் கேட்ட மன்னர், “சிற்பிகளே! விக்கிரகம் செய்யும் போது தங்கத்துகள்கள் சிந்தியிருக்குமே அந்தத் துகள்களைக் கொண்டு வாருங்கள்” என்றார்.

தங்கத்துகள்களை சிற்பிகள் கொண்டு வந்தார்கள். சோதனை செய்த மன்னரின் முகம் கடுமையாக மாறியது.

“சுத்தமான தங்கத்தில் செய்ய வேண்டும் எனச் சொல்லித்தானே உங்களை நியமித்தேன். சிலையில் சிறிது செம்பைக் கலந்து என்னிடம் நம்பிக்கை மோசடி செய்யலாமா?” என்று கடுமையாகக் கேட்டார்.

சிற்பிகள் பயந்து நடுங்கினர். “அரசே, நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தச் சிலையை எங்களால் செய்ய இயலவில்லை. அம்பலவர் அடியார் ஒருவர் வந்து இந்தச் சிலையை செய்தளித்தார்” என்றார்கள்.

மன்னர் திகைத்து விட்டார்.

“அடியார் செய்தாரா? அவரை இழுத்து வாருங்கள்” என்று கட்டளை பிறப்பித்தார் மன்னர்.

உடனே பணியாட்கள் கருவூரார் இருக்கும் இடம் சென்று அவரை அழைத்து வந்தார்கள். கருவூராரை மேலும் கீழுமாகப் பார்த்த மன்னர், “இவரைச் சிறையில் தள்ளுங்கள். யோசித்து, நாளை தண்டனை வழங்குகிறேன்!” என்று சொல்லி சிலையுடன் அரண்மனையை அடைந்தார்.

அங்கு விக்கிரகத்தை ஒரு பீடத்தில் வைத்து அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், மன்னர் கண்களில் இருந்து கண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது.

திடீரென்று அவரெதிரே போகர் தோன்றினார். போகரின் பின்னால் தலைகளில் தங்க மூட்டைகளுடன் அவருடைய ஐந்து சீடர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு சீடரிடம் தராசு ஒன்றும் காணப்பட்டது. திடீரென்று அவர்களைப் பார்த்ததுமே மன்னருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. எழுந்து நின்று கைகளைக் குவித்தார்.

“மன்னா! நீ சிறைச்சாலையில் அடைத்து வைத்திருக்கிறாயே, அவன் என் மாணவன் இனி எந்தக் கருவிலும் ஊர்தல் செய்யாத தகுதி கொண்ட அவனைச் சிறையில் அடைத்து விட்டாய், இதுதானா உன் ஆட்சி முறை?” எனக்கேட்டார் போகர்.

அரசர், “சுத்தத் தங்கத்தில் செய்ய சொன்ன சிலையை செம்பு கலந்து செய்தது மாபெரும் தவறு அல்லவா? அதற்கேற்ற தண்டனைதான் அது” என்றார்.

“சுத்தத் தங்கத்தில் விக்கிரகம் செய்ய முடியாதே! அதனால் தான் செம்பைக் கொஞ்சம் கலக்கச் சொன்னேன். அப்படி செய்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு கேள். தூய்மையான சொக்க தங்கத்தில் வடிவம் ச்ய்து வைத்தால், அதிலிருந்து கிளம்பும் ஒளி, பார்ப்பவர்களின் கண்களை நாளாக நாளாக குருடாக்கி விடும். இந்த அறிவியல் உண்மை உனக்குத் தெரியாது.

அதனால்தான் என் மாணவன் கருவூரான் சிறிது செம்புடன் பலவிதமான மூலிகைச் சாறுகளையும் சேர்த்து விக்கிரகமாகச் செய்திருக்கிறான். சரி போனது போகட்டும் இந்தா நீ தந்த அதே சுத்த மாற்று தங்கம்,” என்றதோடு தராசில் சிலையை வைத்து இன்னோரு தட்டில் தங்கத்தைக் கொட்ட சீடர்களிடம் கூறினார்.

போகர், “அரசே! உன் தங்கத்தை நீ எடுத்துக் கொள்” என்று கூறிவிட்டு சிலையை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பத் தொடங்கினார்.

மன்னர் திடுக்கிட்டு போகரின் காலில் வீழ்ந்து வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.

எழுந்திருங்கள் அரசே நடராசப் பெருமானை உமக்கே தருகிறேன். என் சீடனை எனக்குத் திருப்பிக் கொடு என்று கேட்டார் போகர்.

அதற்கு அரசர் “தாங்களே கருவூராரை சிறையிலிருந்து வெளியில் வரும்படி அழையுங்கள்” என்றார். அவர் அழைக்கவும் சிறையிலிருந்து வெளியே வந்தார் கருவூரார்.

அத்துடன் கோவில் அமையவேண்டிய முறை, எந்தெந்த வடிவங்களை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டும். மூலவரை எப்படி பிரதிட்டை செய்து பூசை செய்ய வேண்டும் என்று தெரிவித்துவிட்டு கருவூரார் அங்கிருந்து சென்றார்.

திருவிடை மருதூர் என்னும் தலத்தை அடைந்து இறைவனை நோக்கி குரல் கொடுத்த போது இறைவன் தலையைச் சிறிது சாய்த்து கருவூரார் குரலைக் கேட்டு பதில் கொடுத்தார். திருவிடை மருதூரில் இன்றும் சிறிது தலை சாய்ந்த நிலையிலேயே இறைவன் திருவடிவம் காணப்படுகிறது.

தஞ்சையில் கோவில் கும்பாபிசேகம் தடைபட்டு நிற்பதைக் கண்ட கருவூரார் உடனே கருவறையில் இருந்த சிவலிங்கத்தை நோக்கிச் சென்றார். எளிதாக அட்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிட்டையும் கும்பாவிசேகமும் செய்து வைத்தார்.

மன்னன் கொண்டாடினான். மக்கள் மகிழ்ந்தார். இறைவனும் மனங்களித்தார்.

தஞ்சையிலிருந்து திருவரங்கம் சென்ற கருவூர் சித்தரை, அபரங்சி என்ற தாசி சந்தித்தாள். அவரை முறைப்படி வணங்கி, ஞான சாதனையில் தனக்குள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டினாள். அவள் ஆர்வத்தைப் பாராட்டி தீர்த்து வைத்தார்.

மறுநாள் அரங்கரிடம் சென்று அபரஞ்சிக்கு பரிசளிக்க நவரத்ன மாலையொன்றை வாங்கி அதை அவளிடம் தந்தார். கருவூரார் விடைபெறுகையில் அபரஞ்சி வருந்தினாள். “நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன்” என்று கூறி தன் யாத்திரையைத் தொடங்கினார்.

மறுநாள் காலை திருவரங்கன் மேனியில் இருந்த நவரத்ன மாலை காணாமல் போன செய்தி தெரிந்தது. அதே சமயம் திருவரங்கக் கோவிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அம்மாலை இருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.

பஞ்சாயத்து தொடங்கியது. “பெருமானின் நகை உன்னிடம் எப்படி வந்தது” என்று அனைவரும் கேட்டனர். அபரஞ்சியும் “இந்த பள்ளி கொண்ட பெருமானின் சார்பாக கருவூரார் கொடுத்த பரிசு இது” என்று அமைதியாக பதிலளித்தாள். கோயிலதிகாரி திடுக்கிட்டார். “கருவூரார் எங்கே?” என்று கேட்டார்.

அபரஞ்சிதா மனதார கருவூராரை நினைத்தவுடன் அவர் தோன்றினார். “இந்த பிரச்சினைக்கு அரங்கனே பதில் சொல்வான்” என்றார். அது சமயம் எல்லோரும் கேட்கும் வண்ணம், “நீங்கள் எல்லோரும் எனக்கு அலங்காரம் செய்து பார்க்க நினைக்கிறீர்கள். நானோ என் அடியார்களை அலங்காரம் செய்து பார்க்க நினைத்தேன். நான் தான் அபரஞ்சிதாவுக்கு நவரத்ன மாலையை கருவூரார் மூலம் அளித்தேன்”, என்று அரங்கர் அசரீரி மூலம் சொன்னார்.

உண்மையை அறிந்த ஊரார்கள் கருவூராரிடமும் அபரஞ்சியிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.

அரசரிடமும் ஊராரிடமும் செல்வாக்கு அதிகரிப்பதைக் கண்ட அவ்வூர் அந்தணர்கள் பொறாமை கொண்டனர். அவரை வம்பில் இழுத்துவிட நினைத்து மதுவையும், மாமிசத்தையும் அவர் இல்லத்தில் மறைத்து வைத்தனர். அரசரிடம் சென்று கருவூராரின் இல்லத்தில் மது மாமிசம் இருப்பதாக கூறினர்.

அரசரின் ஆணைப்படி கருவூராரின் வீடு சோதனைக்குள்ளானது. ஆயினும் அங்கே பூசைக்கு உண்டான பொருட்களும் யாகத்திற்கு தேவையான பொருட்களும் இருப்பதைக் கண்ட மன்னர் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினார். தன்னை முட்டாளாக்கிய வேதியர்கள் மீது கடும் கோபம் கொண்டான். கருவூரார் அவரைச் சமாதானப்படுத்தினார்.

அவமானம் அடைந்த வேதியர்களுக்கு கருவூராரின் மீது கடும் சினம் ஏற்பட்டது. வேதியர்கள் ஒன்று கூடி அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துரத்தினர். வேதியர்கள் நோக்கத்தினைப் புரிந்து கொண்ட கருவூரார் அவர்களுக்கு பயந்து ஓடுவதைப் போன்று திருஆனிலையப்பர் கோவிலுக்குள் ஓடினார்.

கோவிலுக்குள் ஓடிய கருவூரார், “ ஆனிலையப்பா, பசுபதீசுவரா!” என்று கூறியழைத்து கருவறையிலிருந்த சிவலிங்கத்தைத் தழுவினார். இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார்.

கருவூராரைத் துரத்தி வந்தவர்கள் இந்த தெய்வீகக் காட்சியைக் கண்டார்கள். தங்கள் தவறுக்கு வருந்தி பரிகாரமாக ஆனிலையப்பர் கோவிலில் ஒரு தனி சந்நிதி அமைத்து அதில் கருவூராரின் வடிவத்தினை அமைத்து வழிபட்டனர். தஞ்சை பெரிய கோவிலிலும் அவரது சிலை பிரதிட்டை செய்யப்பட்டது.