திருச்சிராப்பள்ளியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் சிவகுரு நாதப்பிள்ளை சிவகாமி அம்மையாரும் கருத்தொருமித்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர், சிவகுருநாதப் பிள்ளை இல்லறத்தை நல்லறமாகச் செய்தார். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இரண்டு ஆண் மக்களையும், பெண் மகவு ஒன்றையும் பெற்றனர்.
தோபாசுவாமிகளின் தோற்றம்:
அதன் பின்னர் சில நாட்களுக்குப் பிறகு இவர் தன் மனைவியாருடன் மூர்த்தி தல தீர்த்தங்களை முறையாகச் செய்து கொண்டு முடிவில் இராமேஸ்வரம் சென்று அங்கு இராமபிரான் பூசித்த இராமலிங்கப் பெருமானை வணங்கிப் போற்றி தம்மிடஞ் சேர்ந்து இருந்தனர்.
இவர்கள் இராமேஸ்வம் சென்று வந்த பிறகு முற்பிறவி தவப்பயனாலும் இராமலிங்கப் பெருமானின் திருவருளாலும் சிவகாமி அம்மையார் கர்ப்பம் தரித்து உரிய காலத்தில் ஒர் ஆண் மகனை பெற்றார். இராம நாத சுவாமியின் திருவருளால் பிறந்த நம் சுவாமிகளுக்கு இராமலிங்கம் எனத் திருநாமமிட்டனர்.
தோபா சுவாமிகளின் இளமைப் பருவம்:
பாலப் பருவம் நீங்கி குமாரப் பருவம் எய்திய இராமலிங்கத்தை முறைப்படி கல்வி கற்க பள்ளியில் சேர்த்தனர். முற்பிறப்புக்களிலேயே அனைத்துங் கற்ற இவர் வருத்தமின்றி பழைய பாடங்களைத் திருப்புவதைப் போல ஆசிரியர்களும், மாணாக்கர்களும் வியக்கும் வண்ணம் கற்றுத் தேர்ந்தார்.
பெயர்க்காரணம்
இவருக்கு தோபா சித்தர் என்ற பெயர் வந்ததற்கும் ஒரு காரணம் உள்ளது. இவர் ஒரு மகான் என்று தெரிந்த பிறகு பள்ளிச்சிறுவர்கள் கூட இவரை சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை 'தோடுடைய செவியன்' என்ற பாடலைப் பாடுங்கள் என்று கேட்பார். அவர்களும் பாடுவார்கள். பல சமயங்களில் மெய்மறந்த நிலையில் உட்கார்ந்து அந்த பாடலைக் கேட்டுக்கொண்டிருப்பார்.
இது பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு மாணவர்களைப் பார்த்து "தோ பா" ('தோ' என்பது 'தோடுடைய செவியன்' 'பா' என்ற எழுத்து பாடுங்கள் என்பதை குறிக்கும்.) என்பார். "தோ பா" என்ற உடனேயே மாணவர்கள் பாடத்தொடங்கி விடுவார்கள். இதனால் சிறுவர்கள் இவரை அன்புடன் 'தோபா சாமி' என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். அதுவே அவருக்குப் பெயராகவும் அமைந்து விட்டது. (குழந்தைகளுக்கு பெற்றோர் பெயர் வைத்துத்தான் நாம் பார்க்கிறோம். ஆனல் இங்கு பார்த்தீர்களா ஒரு தகப்பனுக்கு குழந்தைகள் பெயரிடும் அதிசயம். இது ஞானிகளுக்கே கிடைக்கும் வெகுமதி!) தொடந்து கீழே படியுங்கள்:
இவர் கருவில் திருவுடையவராகவே தோன்றி 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலேயே துறவு பூண்டு அவதூதராக வாழ்ந்திருக்கிறார். இவர் 18ம் நுற்றாண்டின் பிற்பாதியில் திருச்சியில் தோன்றியவர். சுமார் 20 வயதளவில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். இவர் பணியாற்றிய படைப்பிரிவு சென்னையை அடுத்துள்ள ஆவடியில் உள்ளது. அக்கால ஆங்கிலேயே படைப்பிரிவுகளில் காலாட்படையும், குதிரைப்படையும், கப்பல் படையும் இருந்தன. இவர் குதிரைப்படையில்தான் பணியாற்றினார். ஆங்கிலேயர் படைப்பயிற்சியில் தினமும் காலை 6 மணி முதல் 1 மணிவரை படைப்பயிற்சி நடைபெறும். அதன் நபிறகு தேனீர், வகுப்புகள், சிற்றுண்டி என்று பல பிரிவுகள் முறைப்படி தொடர்ந்து நடைபெறும். எல்லாப் பணிகளையும் இவர் திருப்திகரமாகவே செய்து வந்தார்.
பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் படைவீரர்கள் வெளியில் சென்று வருவார்கள். ஆனால் தோபா சாமியோ சுறுசுறுப்பான இளைஞனாக இருந்தாலும் அவர் வெளியில் செல்வதே இல்லை. பணிமுடித்த வேளைகளிலெல்லாம் படைவீரர் தங்கும் இடத்திலேயே தவத்தில் ஆழ்ந்து விடுவார். காலம் செல்லச் செல்ல சாமியின் தவக்காலமும் அதிகரித்து விட்டது.
படைப்பிரிவில் படைவீரர்கள் இரவு 9 மணிக்கெல்லாம் அவர்களுக்குரிய கட்டிலில் படுத்து தூங்கி விடவேண்டும். அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து 6 மணிக்குள் தங்கள் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சுத்தமாக சீருடை அணிந்துகொண்டு படைப் பயிற்சி மைதானத்திற்கு சென்றுவிட வேண்டும். தினமும் இரவு வேளைகளில் கண்காணிப்புக் காவலர்கள் சோதனைக்கு வந்து செல்வார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு தோபா சாமி இரவு வேளைகளில் தியானம் செய்தபடி இருப்பதையும் காலை 6 மணிக்கெல்லாம் படைப்பயிற்சி திடலுக்கு முறைப்படி வந்துவிடுவதையும் பார்த்திருக்கின்றனர். அவர் எதிலும் சரியாகவே இருந்ததால் அவர் தியானம் செய்ததை ஒரு குறையாகவே யாரும் எடுத்துக்கொள்ளவில்லை. அதுபற்றி மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இல்லை.
ஒருமுறை காலை 6 மணிக்கு தோபா சாமி தவத்தில் இருந்த நேரத்தில் மேலதிகாரி படைவீரர்கள் தங்கும் கூடாரத்தினுள் நுழைந்தார். அங்கு தவத்தில் தோபா சாமி ராணுவப் பயிற்சிக்கு தயாராகாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்ற மேலதிகாரி, தவத்தை கலைக்காமல் படைப்பயிற்சி திடலுக்கு வந்தார். அங்கு சாமி முறையான சீருடையுடன் படைப்பயிற்சி பெறத் தயாராக அவருக்கு உரிய வரிசையில் நின்று கொண்டிருந்ததையும் கண்டார். மேலதிகாரி கேள்வியுற்ற போதுதான் விசயம், அவர் ஒரு மகா சித்தர் என்பது தெளிவு பிறந்தது. அதன் விளைவாக சாமி படைவீரர் பணியை விட்டு விலகி சுதந்திர துறவியாக வெளியில் வந்து, சென்னையிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் தம் சித்தாடல்களைச் செய்து கொண்டிருந்தார்.
சித்தர் வாழ்வு:
இந்த தோபா சாமி தற்போதைய மைலாப்பூர், சைதாப்பேட்டை, தாம்பரம் போன்ற பல பகுதிகளிலும் கூட "சித்தன் போக்கு சிவன் போக்கு" என்பதற்குரிய விதத்தில் சுற்றி திரிந்திருக்கிறார். பக்தர்கள் பல பேருக்கு உதவியும் உள்ளார்.
சென்னையிலும் சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளிலும் சுற்றிக்கொண்டிருந்த சாமி ஓரிரு ஆண்டுகளிலேயே தம்மை மறந்த அவதூதராக மாறிவிட்டார். உடை அணியவேண்டும் என்ற உணர்வையே அவர் இழந்துவிட்டார். சில மாதங்களிலேயே அவருக்கு பக்தர்கள் பலர் சேர்ந்துவிட்டதால் அவருடைய தவ வலிமையை மக்கள் உணரத் தலைப்பட்டனர். இவர் யாரிடமும் தீட்சை பெற்றதாகவோ, வழங்கியதாகவோ தெரியவில்லை. இருப்பினும் சீடர்களைப்போல் சிலர் அவருடனையே இருந்து வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சித்தநாத சுவாமிகள். தோபா சாமிக்காக சித்தநாதசாமிகளே தோடுடைய செவியன் பாடலைப் பாடினார். அந்த சித்தநாதன்தான் கடைசிவரை சாமியின் கூடவே இருந்தவர்.
இவர் அவதூதராக மாறிய பிறகு 1840க்கும் 1850 க்கும் இடைப்பட்ட காலத்தில் சென்னை யில் வாழ்ந்திருக்கிறார். இந்த பத்தாண்டு காலத்தில் இரமலிங்க அடிகளும் சென்னையில் வாழ்ந்திருக்கிறார். அக்காலத்தில் ஒரு சில ஆண்டுகள் இராமலிங்க அடிகள் (வள்ளலார்) தினமும் தவறாமல் திருவொற்றியூர் தியாகரஜ பெருமான் திருக்கோவிலுக்கு சென்று தியாகராஜ பெருமானையும் வடிவுடையம்மனையும் வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது தோபா சித்தர் அந்த கோவில் சன்னிதித் தெருவில் அவதூதராக நடமாடிக்கொண்டிருந்தார். அப்போது தோபா சித்தர் தெருவில் போகிறவர்களையும் வருகிறவர்களையும் பார்த்து இதோ ஒரு நாய் போகிறது, இதோ ஒரு நரி போகிறது, இதோ ஒரு காளைமாடு போகிறது என்று ஏதோ ஒரு விலங்கின் பெயரால் அழைத்து வந்தார். அவருடைய பக்தர்களுக்கெல்லாம் இது ஒரு வியப்பான தொடர் நிகழ்ச்சியாக இருந்து வந்தது. ஒரு நாள் அவர் சன்னிதித் தெரு வழியே இராமலிங்க அடிகள் (வள்ளலார்) சென்றதைப் பார்த்து இதோ ஒரு மனிதன் போகிறான் என்று மகிழ்ச்சி பொங்க கத்திவிட்டார்.
19 நூற்றாண்டின் முற்பகுதியில் சாமி சென்னையை விட்டு வேளியேற முற்பட்டார். அப்போது அவருடைய முக்கிய சீடர்கள் சிலர் அவரை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர். குதிரை வண்டி வேலூர் சென்றதும் அங்கே சாமி இறங்கிவிட்டார்.
அவருடன் சீடர் சித்தநாதனும் இறங்கிவிட்டார். அதன் பிறகு சாமி வேறெங்கும் செல்லவில்லை. வேலூரிலேயே சுமார் 25 ஆண்டுகள் சித்தாடல்கள் பல புரிந்து கொண்டு அவர் சமாதி கூடியபோது அவருக்கு வயது 70 இருக்கும். மக்கள் இன்றும் அவர் சமாதியில் வழிபாடு செய்கின்றனர். அவரது முக்கிய சீடரான சித்த நாதரே அவருக்கு சமாதி எழுப்பி அதன்மீது லிங்க பிரதிஷ்டை செய்துள்ளார். சிறிது காலத்திற்கு பிறகு சித்தநாதரும் அங்கேயே சமாதி கூடினார். லிங்கத்திற்கு எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நந்தியின் அடியில் அவருடைய சமாதி உள்ளது.
சமாதி உள்ள இடம் :
வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் சைதாப்பேட்டை மெயின்பஜாரில் உள்ள சாலையில் அவருடைய சமாதி உள்ளது. சித்தரின் சமாதி இப்போது ஒரு மடாலயமாக வளர்ந்துள்ளது.
No comments:
Post a Comment