நமது (ஜெகத் மகாகுரு, தத்துவ தவஞானி, ஞானவள்ளல்) பரஞ்சோதி மகான் அவர்கள், இந்திய நாட்டின் தென்பகுதியில் "காண்ஸாபுரம்" என்ற ஊரில் 2-5-1900ஆம் ஆண்டு இரவு 8.30 மணியளவில் பிறந்தார்கள். இந்த புனித நன்னாளை நாம் ஜெனன விழாவாக கொண்டாடி வருகிறோம்.
ஞான உதயம்
தாம் வசித்து வந்த ஊரில் 11.11.1911ஆம் தேதி பகல் 11மணிக்கு மேலை நாட்டு வல்லரசர் ஒருவரின் முடிசூட்டு விழா வைபவம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவதைக் கண்ணுற்ற போது, நமது குருபிரான் அவர்கள் இதயத்தில், அரசனைக் கடந்த பெரியவனாகிய கடவுளைக் காணவேண்டும் என்ற ஏக்கம் உதயமாயிற்று அவ்வேகத்தின் விளைவே கடவுளின்பால் காதலாகி, அக்காதலின் வேகவிவேகமே "பரஞ்சோதி" மகானாக விளைந்ததாகும். எனவே இப்புனித நன்னாளை நாம் "ஞானோதய தின" விழாவாகக் கொண்டாடி வருகிறோம்.
குருபிரான் அவர்கள் 1919ஆம் வருடத்திலேயே தனது இளமையில் பணியாளாக பர்மா சென்று விட்டபடியால் தனது தாய்மொழி போல் பர்மா மொழியையே பேசவும் எழுதவும் பழக வேண்டியதாயிற்று. 11.11.1911ல் ஏற்பட்ட ஏக்கத்தின் காரணமாகவே தனது வாழ்வோடு பற்பல யோக அப்பியாசங்களிடனும், மந்திர தந்திர ஜப தபங்களுடனும் மிக உருக்க நீர் வடித்து அரசனை கடந்த கடவுளை காணவேண்டும் என்ற தீவிரக் காதலால் பற்பல முயற்சிகளில் ஈடுபட்டு, தவ புனித வாழ்வு வாழ்ந்து வந்தார்கள். அதே ஊரில் ஆலயம் ஒன்றில் வசித்து வந்த பெரியவர் ஒருவர் தமது குருபிரானுடைய நல்லெண்ணத்தையும் ஏக்கத்தையும் அவரது விடாமுயற்சியையும் நன்கு கவனித்து வந்தார். விடிவெள்ளி தோன்றும் முன்பாகவே நமது குருபிரான் ஆலயத்திற்கு வருவதையும், வழிபாடுகள் செய்வதில் மிகுந்த உருக்கமிருப்பதையும், அவ்வாலயத்திலேயே வசித்து வந்த அவர் நன்கு கவனிக்க ஒரு சந்தர்ப்பமாக விளங்கிற்று.
எனவே அந்தப் பெரியவர் நமது மகானை வலியநண்பராக்கிக் கொண்டார். நட்பு முதிர்ந்து இரங்கூன் புதுக்காண் ரோட்டின் அருகாமையில் உள்ள பழைய குதிரை மைதானத்தில் 7.11.1938 ஆம் தேதி 11 மணி 11 நிமிடத்திற்கு அந்த பெரியவர் மூலம் நமது மகான் உபதேசம் பெற்றார்கள். குருபிரான் அவர்கள் சுமார் 21 ஆண்டுகளாக உருக்க நீர் வடித்துத் தேடிய பொருளை அடையும் மார்க்கம் கிடைத்துவிட்ட ஊக்க வேக விவேகத்தின் விளைவால் "பரஞ்சோதி" என்ற தன்னிலையாகிய பேரின்ப நிலை அடைந்தார்கள்.
நமது குருபிரானைக் கண்ணுற்ற அப்பெரியவர் மிக்க மகிழ்ந்து சிலாகித்தார். 7.7.1938 முதல் தமக்கு தெரிந்த இந்த உபதேசத்தை பிறருக்கும் வழங்கலாம் என்ற அனுமதியையும் வழங்கினார். 8.7.1938ல் இரங்கூன் டவுனில் சென்று கொண்டிருக்கும் சமயம் ஒரு பெரியவர் மகானைப் பார்த்து, தாங்கள் ஒரு பெரிய குருவைப் போல் விளங்குகிறீர்கள் என்று கூறினார். அன்றிலிருந்து தம் தொழில், மதம் யாவும் விட்டுவிட்டுத் தாம் ஒரு குருவாக வாழ்வது என முடிவெடுத்துக் கொண்டார்கள். அந்நாள் முதல் தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்ற நற்கருணையினால், உலக மக்கள் அனைவருக்கும் இந்த "குண்டலினி" உபதேசத்தை வாரி வாரி வள்ளலாக வழங்கினார்கள்.
ஜெகத் மகாகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் அவர்கள் 1939ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா வந்தார்கள். 7.1.198ந் தேதி 11 மணி 11 நிமிடத்திற்கு மலர்ந்த பரஞ்சோதி என்ற மலர், ஞானச் செல்வத்தால் உலக மக்களின் அறிவிற்கு எட்டாத அளவிற்கு உயர்ந்தும், கருணை என்ற அருட்செல்வத்தால் இப்பூவுலகெங்கும் அருள் மணம் கமழ்ந்து, கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் அவ்வருள் மணம் வீசிப்பரவி, பரிசுத்தமாகப் பிரகாசிப்பதற்கு காரணப் புருஷராக நமது ஜெகத்குரு திகழ்ந்து வந்தார்கள். 1944ஆம் ஆண்டு முதல் இந்திய நாடு மட்டுமின்றி மேலை நாடுகள் முழுவதும், தாம் ஒருவராக தனித்தே சென்று எல்லா நாடுகளிலும், ஆங்காங்கே உள்ள சீடர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளிலும், நகரங்களிலும் சபைகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.
பர்மா மொழியை தாய்மொழி போல் பேசியும் எழுதியும் பழகியிருந்த தமது குருபிரான் ஞானபீடம் ஏறியதும் "நான் - கடவுள்" என்ற தத்துவ தவஞான நீதிநூலை தமிழில் அருள் பாலித்துள்ளார்கள். உலகமக்கள் அனைவருக்கும் அவரவர்களின் தகுதிக்கேற்பச் சமாதானமாக வாழ வேண்டியதற்குள்ள உணவு, உறக்கம், உடை, தொழில், விவசாயம், அரசியல், விஞ்ஞானம், பேரின்பநிலை முதலியவற்றிற்குச் சரியான விளக்கங்களை எல்லா நாட்டிற்கும் பொதுவாக எளிமையாக விளக்கிக் கூறுவதற்காக "உலக சமாதான ஆலயம்" சென்னையில் 20.7.46ல் குருபிரானால் தொடங்கப்பட்டது.
சென்னை புதுவண்ணாரப் பேட்டை 'டோல்கேட்'டை ஒட்டினார் போல் அமைந்திருக்கிறது, உலக சமாதான ஆலயம். ஞானவள்ளல், தத்துவ தவஞானி, ஜெகத்மகா குரு என்றெல்லாம் சீடர்களால் போற்றப்படும் பரஞ்சோதி மகானின் சமாதியானது, இந்த உலக சமாதான ஆலயம் என்ற கட்டடத்தில்தான் அமைந்துள்ளது.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், இந்தோனேஷியா என்று உலகநாடுகளில் எல்லாம் மகான் தேடிப்போய் 'தீட்சை'யைக் கொடுத்து மக்களை தன்னைப் போலவே ஞானத் தெளிவு நிலைக்கு கொண்டு வரும் பணியை மேற்கொண்டார்.
....வாழ்க வளமுடன் என்ற சொல்லுக்கு சொந்தக் காரராக விளங்கும் வேதாத்ரி மகரிஷி, நடிகவேள் எம்.ஆர்.ராதா இன்னும் சில பிரபல அரசியல், ஆன்மிக தலைவர்கள் மகானின் சீடர்களாய் இருந்து அவர் தவத்தை சீராக கடைப் பிடித்தவர்கள்...
மகானின் புத்தகத்திலிருந்து,:
...ஞானமும், அரசியலும் ஒன்றுபட்ட அன்றே, உலக சமாதானம். பசிப்பிணியையும் ஒழித்து, பணத்துக்குள்ள மரியாதையையும் ஒழித்து, உருவ வழிபாடுகளையும் ஒழித்து, உலகிலுள்ள ஜாதி, மத, வேத, போத-பேதங்களையும் ஒழித்து, எந்நாட்டில் விளைந்த விளைவானாலும் அது எல்லா நாட்டிற்கும் பொதுவாய் நிர்வகிக்கும் நிர்வாகமுள்ள அன்றே உலக சமாதானம்!
... புகழை நம்பி, அறிவை அடிமைப் படுத்தாதீர்கள், துன்பத்திற்கு அஞ்சி உண்மையை விட்டு விடாதீர்கள்... ஆயிரம் ஆண்டு வணக்கத்தை விட , அரை நிமிட ஆராய்ச்சியே மேல்!