காக புசுண்ட சித்தர். இவர் ஒரு காக்கை உருவில் பல இடங்களில் சுற்றி அலைந்து பல விஷயங்களை கண்டறிந்தார் என்பர். இவர் வரரிஷியின் சாபத்தால் சந்திரக்குலத்தில் பிறந்தார். இவர் அறிவிற்சிறந்தவர். பெறும் தவசி. இவர் பிரளயகாலங்களில் அவிட்ட நடசத்திர பதவியில் வாழ்வார் ஆதலினால் இவரை காக புசுண்டர் என்பர்.
ஒரு சமயம் கயிலையில் தேவர்கள், சித்தர்கள் அனைவரும் கூடி இருந்தனர். சிவபெருமான் தனக்கு எழுந்த சந்தேகத்தை அங்கு கூடி இருந்தவர்களிடம் தெரிவித்தார். “இந்த உலகமெல்லாம் பிரளயகாலத்தில் அழிந்து விட்ட பிறகு எல்லோரும் எங்கு இருப்போம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஷ்வரன், சதாசிவம் ஐவர்களும் எங்கே இருப்பார்கள் தெரியுமா” என்றார்
எல்லோரும் மௌனமாக இருக்க மார்க்கண்டேயன் “இதற்கு திருமாலே பதில் சொல்வார்” என்றார். திருமாலிடம் சிவன் கேட்டார். அனைவரும் பிரளயத்தில் எல்லாம் அழிந்து போயின. ஆழிலை மேல் பள்ளிகொண்டிருந்த என்னிடத்தில் சித்துக்கள் யாவும் ஒடுங்கின. நானும் துயிலில் ஆழ்ந்திருந்தேன். என் சார்பாக என்னுடைய சுதர்சன சக்கரம் யாராலும் தடுக்க முடியாத வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அப்பொழுது அங்கு வந்த புசுண்டர் எப்படியோ என் சக்கரத்தை ஓடாமல் நிறுத்தி விட்டு அதை தாண்டிச் சென்றார். அதனால் அவர் மிகவும் வல்லவர். வசிட்டரை அனுப்பி அவரை அழைத்து வருவதுதான் சரி அவரால் மட்டுமே உங்கள் கேள்விக்கு பதில் சொல்லமுடியும் என்றார் மகாவிஷ்ணு.
சிவனும் வசிட்டரை அனுப்பி புசுண்டவரை அழைத்து வரச்சொன்னார். அவரிடம் தன்னுடைய சந்தேகத்தைக் கூறினார். புசுண்டரும் தாம் எத்தனையோ யுகபிரளயங்கள் தோன்றி அழிந்ததையும் எத்தனையோ மும்மூர்த்திகள் அழிந்து போனதையும் ஒவ்வொரு பிரளயத்திற்குப் பிறகும் உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டதை பார்த்ததாகவும் கூறினார். தாம் காக உருவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல் ஆழ மரத்தின் மேல் வீற்றிருந்து இந்த அதிசயங்களை கண்டதாகவும் கூறினார்.
காகபுசுண்டர் துணைக்காவியத்தில் இந்த நிகழ்ச்சி விளக்கமாக கூறப்படுகிறது. காக புசுண்டர் பெயரில் வைத்தய நூல்கள் பல உண்டு. புசுண்டர் நாடி, எண் ஜோதிட நூலும் உண்டு இது தவிர காகபுசுண்டர் ஞானம் 80, காகபுசுண்டர் உபநிடதம் 31, காகபுசுண்டர் காவியம் 33, காகபுசுண்டர் குறள் 16, என்றும் நூல்கள் இவருடைய வேதாந்தக் கருத்தை விளக்குகின்றன. காணாத காட்சியெல்லாம் கண்ணிற் கண்ட காகபுசுண்டர் யோகஞானம் சமாதி முறை, காரிய சித்தி பெறும் வழி, இரசவாதாம், நோய்தீர்க்கும் மருந்து வகை, வேதியரை மயக்கும் மருந்து முறை, பிறர் கண்ணில் படாமல் மறைந்திருக்க மருந்து, பகைவரை அழிக்க வழி போன்றவைகள் இவருடைய நூலில் கூறப்பட்டுள்ளன. “இல்லறமாயினும் துறவறமாயினும் மனதில் மாசின்றி ஒழுக வேண்டும். அப்படி ஒழுகாவிடில் செய்யும் பிற செயல் வீண் பகட்டாகக் கருதப்படும்.” என்றார்.
No comments:
Post a Comment