கமல முனியின் பேரன் தான் புலத்தியர். இவர் அகத்தியருக்கு உகந்த சீடராகத் திகழ்ந்தார். இவர் திரணபிந்துவின் தவச் சாலையில் தவம் செய்து கொண்டிருக்கும் போது அரம்பையர் பலர் நீர் விளையாட்டிற்கு அங்கு வந்தனர். அவர்களின் ஆரவாரம் புலத்தியரின் தவத்திற்கு இடைஞ்சல் செய்தன.
இதனால் கோபமுற்ற புலத்தியர் அந்த அரம்பையர்களிடம் இனி என்னுடைய எதிரில் யாராவது பெண்கள் வந்தீர்களானால் கர்ப்பமடைவார்கள் என்று சாபமிட்டார். இந்நிகழ்ச்சிக்குப் பின் புலத்தியரின் சாபத்திற்கு அஞ்சி எந்தப் பெண்களும் வராமலிருந்தனர். புலத்தியரின் சாபத்தினை அறியாத திரணபிந்துவின் மகள் ஆவிர்ப்பு இவருடைய ஆசிரமத்திற்குப் பக்கத்தில் சென்றாள். அவரின் சாபத்தால் உடனே அவள் கர்ப்பமுற்றாள்.
திடுக்கிட்ட அவள் தன்னுடைய தந்தையிடம் போய் செய்தியைக் கூறினாள். அவள் கர்ப்பமடைந்துள்ளதால் அவளை மணந்து கொள்ளும் படி திரணபிந்து கூற குரு கட்டளைப்படியே அவளை மணந்து இல்லறத்தில் ஈடுபட்டார். கார்த்த வீரியனாற் சிறையிடப்பட்ட ராவணனை இவர் சிறை மீட்டார். தமது தாயான கலைமகளிடம் இவர் செல்லுங்கால் தனது மைந்தன் என்ற பற்றுதலில்லாமல் வரவேற்றார்.
இதனால் கோபமுற்ற புலத்தியர் அவளை நதியாகி ஓடும்படி சாபமிட்டார். சரஸ்வதியும் பதிலுக்கு அரக்கரில் விபீடணனாகப் பிறப்பெடுக்கும்படி பதில் சாபமிட்டார். புலத்தியருக்கு விசித்திர வசு, அகத்தியர் என்னும் இரண்டு மகன்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சிங்கள நாட்டில் பிறந்த புலத்தியர் தம் இறுதிக் காலத்தில் சீனதேச கடலோரத்தில் சில நாள் தங்கியிருந்து பிறகு தேரைய ரோடு பொதிகை மலைச் சாரலில் வந்து சமாதி புகுந்தார்.
பிறகு சிலகாலம் வெளியே வந்து தேரையருக்கு வைத்திய ரகசியங்களைப் போதித்து விட்டு மறுபடியும் சமாதி புகுந்தார். புலத்தியரின் சமாதி பொதிகை மலைச்சாரலில் பாபநாசத்தில் இருப்பதாகக் கூறுவர். இரண்டாவது முறையாக ஆவுடையார் கோவிலிலும் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment