Wednesday, 25 July 2018

ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள்.


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடைசி லிங்கமாகிய ஈசான்ய லிங்கத்தின் அருகே ஜீவசமாதி அமைந்துள்ளது. ஞான தேசிகர் மடம் என்று அழைப்பர்.காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை மற்றும் மாலை 3.00 மணி முதல் 6.00 மணிவரை நடை திறந்திருக்கும். கடந்த ஒரு வருடகாலமாக மஹான் முக்குபொடி சித்தர் இங்குதான் தங்கி இருந்தார்.

ஒருமுறை ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள் இங்கு தவம் செய்துகொண்டிருந்தார்.  தவத்திலிருக்கும் இவர் முன்னே ஒரு பெண்மணி நித்தமும் ஒரு பித்தளை செம்பு நிறைய பால் கொண்டுவந்து வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.  ஒரு நாள் சுவாமி அந்த பாலில் பாதியை குடித்து மீதியை அந்த பெண்மணியிடம் கொடுத்து "இந்த பாலை ஏதாவது ஒரு இடத்தில் ஊற்றி தோண்டிப்பார் என்றார்.
அந்தப்பெண்மணியும் அப்படியே செய்ய பொற்காசுகள் கொண்ட புதையல் கிடைத்ததாம். அப்பெண்மணி பலரிடம் சொல்லக்கேட்டு ஊரே பால் செம்புடன் சுவாமியிடம் தவம் செய்ய விடாது தொந்தரவு செய்தனர். இது நித்தமும் தொடர சுவாமி அண்ணாமலையாரை நோக்கி "என் சித்துவேலை எனக்கே வலையாகி விட்டது.  என்னை காப்பாற்றுங்கள்" என வேண்டினார்.
அன்றிலிருந்து அவர் கண்மூடி தவம் செய்யும் வேளையில் அவரை யாரும் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் அவர் கண்திறந்தால் அருகில் வந்துவிடுவர். என்ன நடக்கிறதென்று சுவாமிக்கு தெரியாது மீண்டும் அண்ணாமலையாரை வேண்ட சுவாமிக்கு  காட்சி தெரிகின்றது.  எப்பொழுதெல்லாம் இவர் கண்மூடி அண்ணாமலையாரை நோக்கி தவம் இயற்றுகிறாரோ அப்பொழுதெல்லாம் இவரது இரு புறமும் இரு புலிகள் வந்துவிடுகிறது. மக்கள் நெருங்குவதில்லை. கண் திறந்தவுடன் புலிகள் மறைந்துவிடுகிறது. மக்கள் நெருங்கிவருகின்றனர். அந்த இரு புலிகள் வேறு யாரும் அல்ல.  ஸ்ரீ அண்ணாமலையாரும் ஸ்ரீ உண்ணாமுலை தாயாரும் காவலாக நின்று முக்திக்கு வழி செய்தனர். இப்படிப்பட்ட ஒரு சித்தரின் ஆற்றலை பெற கிரிவலம் செய்யும் ஒவ்வொருவரும் இந்த நினைப்புடன் இவரது ஜீவசமாதியில் தரிசனம் செய்வோம்.

No comments:

Post a Comment