Sunday, 19 March 2017

ஈரேழு பிறவி

நீண்ட நெடுங்காலங்களுக்குப் பிறகு என் குருநாதர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. இருவரும் நிறையப் பேசிக் கொண்டோம். அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஈரேழு பிறவிகள் என்ற வார்த்தை வந்து விட்டது. அவர் உடனே ஈரேழு பிறவி பற்றி உனக்கு என்ன தெரியும் ? என்று கேட்டார். நானும் வேறொரு குருநாதர் மூலம் அறிந்த விவரத்தை அவரிடம் வெளிப்படுத்தினேன். அதாவது ஜீவனானவன் அடையும் மனபரிபாகங்கள் ஏழு நிலைகளில் நிகழ்கின்றன. அதுவே ஏழு பிறப்பு எனப்படுகிறது. நாம் விழித்திருக்கிறோம் என்பது ஒரு மனநிலை, கனவு காண்கிறோம் அது ஒரு மன நிலை, கனவே இல்லாமல் உறங்கிப் போய் விடுகிறோம். அஞ்ஞான இருளில் தூங்கும் அப்பொழுதும் ஒரு மனநிலை இருக்கிறது. இப்படிப்பட்ட ஏழுவிதமான அஞ்ஞான அடுக்குகளான மனநிலைகளைக் கடந்து செல்வதை ஏழு பிறவி என்பார்கள். இவை ஏழையும் கடந்து விட்டால் ஞானம் சித்திக்கும். இன்னும் சிலர் ஞானத்திலும் ஏழு நிலைகள் உண்டு என்று விளக்குவதுண்டு. அதைத்தான் ஈரேழு பிறவி என்று சொல்வார்கள். இதையே குண்டலினி யோகத்தில் ஏழு ஆதாரங்களை ஏழு பிறவிகளாகவும், ஏழு ஞான பூமிகாக்களை ஏழு பிறவிகளாகவும் கொண்டு ஈரேழு பிறவி என்று சொல்வார்கள் என்றும் சொன்னேன்.

அவர் சிரித்தார். பிறவிகளை எண்ண முடியாது. கல் நிலையிலிருந்து மனிதன் என்கிற நிலை வரை எட்டுவதற்குள் ஜீவன் பலகோடி பிறவிகள் எடுத்து விடுகிறது. அது கணக்கில் வருவதேயில்லை. கடலில் அலைகள் எழுவதும், விழுவதும் போல ஜீவாத்மாக்கள் தோன்றுவதும், ஒடுங்குவம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. மனிதனாகப் பிறந்த பிறகும் கூட விலங்கைப் போல வாழ்ந்து மடிபவர்கள் கோடாணு கோடி. அவர்கள் பிறப்பு எண்ணப்படுவதில்லை. ஆனால், என்று ஒரு மனிதன் தன்னையறியும் முயற்சியில் ஈடுபடுகிறானோ, அந்தப் பிறவியிலிருந்து அவன் பயணம் மாறி விடுகிறது. முற்றிலுமாக வேறொரு தளத்திற்குள் அவன் பிரவேசிக்கிறான். அங்கிருந்துதான் அவன் பிறவியின் பயனை நோக்கி தன் பயணத்தை ஆரம்பிக்கிறான். அதிலிருந்துதான் அவன் பிறவி எண்ணப்படுகின்றது.

அப்படி மனிதன் இறைநிலை அடைய ஏற்பட்ட படித்தரங்கள் நான்கு. அவை சரியை, கிரயை, யோகம், ஞானம் என்பவைகளாகும். இதில் சரியை என்பது உடல், மன சுத்தத்தோடு இறைவனை வழிபடுதலாகும். இந்நிலையை பக்தி என்றும், ஜீவன் பக்தன் என்றும் அழைக்கப்படுவதாகும். சித்தாந்தத்தில் இதை தாச மார்க்கம் என்பர். இதன் முடிவு சாலோகம் என்கிற மேல் நிலையாகும். அடுத்த படித்தரம் கிரியையாகும். பக்தியோடு கூட பூஜை வழிபாடுகளைச் செய்தல், ஜெபங்களைச் செய்தல், யாகங்கள், வேள்விகளைச் செய்தல் போன்றவை இதில் அடங்கும். இதில் பக்தன் கர்ம யோகி ஆகிறான். சித்தாந்தம் இதைச் சத்புத்திர மார்க்கம் என்று வழங்கும். இதன் முடிவு சாமீபம் எனும் மேல் நிலையாகும்.

யோகம் என்பது ஆசனம் செய்தல், ப்ராணனைக் கட்டுப்படுத்தி சாதனை புரிதல், தியானம் செய்தல் போன்றவைகளாகும். இதில் ஜீவன் யோகியாக ஆகி விடுகின்றது. சித்தாந்தம் இதை சகமார்க்கம் என்றழைக்கும். இதன் முடிவு சாரூபம். அடுத்தது ஞானம். தன்னைத்தான்றிந்து மெய்யறிவு விளக்கம் பெற்று, மெய்யுணர்தல் ஞானம் எனப்படும். இதில் ஜீவனின் நிலை ஞானி என்றாகிறது. சித்தாந்தம் இதைச் சன்மார்க்கம் என்றழைக்கும். முடிவு சாயுஜ்ஜியம். இதுதான் முக்தி. இறைநிலை அடைதல். இதில் பதினான்கு பிறவிகள் எங்கு வருகின்றனவென்று கேட்டால்,
1. சரியையில் சரியை,
2. சரியையில் கிரியை,
3. சரியையில் யோகம்,
4. சரியையில் ஞானம்,
5. கிரியையில் சரியை,
6. கிரியையில் கிரியை,
7. கிரியையில் யோகம்,
8. கிரியையில் ஞானம்,
9. யோகத்தில் சரியை,
10. யோகத்தில் கிரியை,
11. யோகத்தில் யோகம்,
12. யோகத்தில் ஞானம்,
13. ஞானத்தில் சரியை
என 13 பிறவிகளைக் கடந்து ஞானத்தில் கிரியையையும், ஞானத்தில் யோகத்தையும், ஞானத்தில் ஞானத்தையும் ஒரே பிறவியில் புரிந்து 14வது பிறவியில் ஜீவன் முக்தி அடைகிறான். இதுதான் ஈரேழு 14 பிறவிகள். ஞானத்தில் சரியை என்பது சான்றோர்களின் மொழிகளைக் கேட்டு, அதை உள்ளது உள்ளபடி உணர்தலாகும். 13ஆவது பிறவியில்தான் அந்த உணர்வே ஏற்படுகிறது. இதை வள்ளுவர்

'' கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி'' என்பார்.

அந்நிலையில்தான் ஜீவன் மீண்டும் வந்து பிறக்காமலிருப்பதற்கான நெறியை(வழியை) அறிந்து கொள்கிறது. அறிந்தால் மட்டும் போதுமா ? அதைச் செயல்படுத்த வேண்டாமா ? அதற்குத்தான் அந்த 14ஆவது பிறவி. அந்தப் பிறவியில்

''ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு''

ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளதென எண்ண வேண்டாம் என்கிறார் வள்ளுவர். இதுதான் ஞானத்தில் கிரியை. சான்றோர்கள் மூலம் கற்றைதை உணர்ந்து அதன்படி நிற்கின்ற, ஒழுகின்ற ஞானத்தின் கிரியையாக இந்த நிலை அமைகிறது. என்பது கோட்பாடு. இனி

''பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு''

முன்பு கற்றது, பிறகு சிந்தித்து அதன்படி நின்றது. இப்பொழுது தெளிவடைகின்றது. இந்தத் தெளிந்த நிலையே ஞானத்தில் யோகமாகிறது. முடிவாக தெளிந்த உண்மைப் பொருளோடு சார்ந்து விடுவதே ஞானத்தில் ஞானமாகிய முக்தி என்கிற வீடுபேறாகின்றது. 

''சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்''

மெய்ப்பொருளை  அறிந்து, உணர்ந்து. தெளிந்து, அதைப் பற்றி வாழ்ந்தால், பற்று கேடுகளால் ஏற்படும் பிறவி எனும் நோயாகிய துன்பம் நீங்கி விடும். இதுதான் ஈரேழு பதினாலு பிறவிகள். எனவே இது வரையிலும் என்ன நினைத்துக் கொண்டிருந்தாயோ, எப்படி இருந்தாயோ ? அதையெல்லாம் மறந்து விடு. விட்டு விடு. இனி இந்த க்ஷணம் முதல் உடல், மன சுத்தமுடன் இறைவனை நாடு. அவன் பாதாரவிந்தங்களைப் பற்றி விடு. வரும் பிறவிகளனைத்தையும் அவனருளாளே இனிதே கடந்து நிறைவடையலாம் என்றார். எனக்கு இது முற்றிலும் புதிய விளக்கமாக இருந்தது. வியப்பாகாவும் இருந்தது. நான் மையத்தில் நிற்பது போலவும், என்னைச் சுற்றி எல்லாம் இருப்பது போலவும் நான் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், மையம் நீயல்ல. அது உனக்குள் இருக்கிறது. அதை உணராமல் மதி கெட்டலையாதே என்று சொல்லாமல் சொல்லி விட்டுப் போனார் என் குருநாதர். வாழ்க குரு. வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment