Monday, 28 March 2016

கருணாகர சுவாமிகள்

தூண்டா சுயம் ஜயோதி
        சுடர் விட்டு எறிந்திருக்க 
வேண்டாத சீடருக்கு 
        விளக்கு வைத்து ஜயோதி என்றார் 

எத்தனை யுகம் இந்த 
        வைக்கும் ஜயோதி கண்டாலும்
முத்தர் என்ற பெயர் வருமோ
        விழித்து உணர்வீர் சுயம் ஜ்யோதியினை 
                                                      
சுயம்  ஜயோதி என்றால் அதை 
       ஏதோவென்று மலைக்க வேண்டாம்
லயம் அடையும் கண்களுக்கு 
       தரிசனமாம் அக்கினி பிழ்ம்பகாக 

                            ........................கருணாகர சுவாமிகள்

Sunday, 20 March 2016

ஞானானந்தர்


‘தபோவனத்திற்கு என்னை நாடி வருபவர்களின் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்ளுவேன்’. ‘கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான்’. ’கலியுகத்தில் நாம சங்கீர்தத்தனமே முக்திக்கு வழி’ – இது போன்று பல்வேறு அமுத மொழிகளைத் தம்மை நாடி வந்த பக்தர்களிடையே உபதேசித்து அவர்களை நல்வழிப்படுத்திய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் வரை வாழ்ந்ததாகக் கூறப்படும் இம்மகான் கபீர்தாஸ், ஷிர்டி சாயிபாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ராமலிங்க அடிகளார், சற்குரு சுவாமிகள், விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ அரவிந்தர் எனப் பல மகான்களைச் சந்தித்த பெருமைக்குரியவர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்கள புரி என்னும் ஊரில் வெங்கோபா சாஸ்திரிகள்-சக்குபாய் தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் ஸ்ரீ சுவாமிகள். இயற்பெயர் சுப்ரமண்யம். சிறுவயது முதலே ஆன்மிக நாட்டமும் இறை நம்பிக்கை உடையவராகவும் விளங்கினார். ஒருநாள் தியானத்தின் போது பேரொளியின் தரிசனம் கிட்டியது.  அவ்வொளியின் வழிகாட்டலின் பேரில் தல யாத்திரை மேற்கொண்டவர், பண்டரிபுரத்திற்குச் சென்று அங்கேயே வசிக்கலானார்.

ஒரு முறை பண்டரிபுரம் வந்திருந்த காஷ்மீர் ஜோதிர்லிங்க பீடாதிபதி ஸ்ரீ சிவரத்தின கிரி சுவாமிகள் சுப்ரமண்யத்தை தன்னுடன் அழைத்துச் சென்றார். அவரை தனது சீடனாக ஏற்றுக் கொண்டவர் வேத, வேதாந்தக் கருத்துக்களைக் கற்றுத் தந்தார். பின் தீக்ஷை அளித்து ’ஞானானந்தர்’ என்ற நாமம் சூட்டி மடாதிபதியாக நியமித்தார். அப்பீடத்தின் தலைவராக சிலகாலம் விலங்கிய ஞானானந்தர் குருவின் மறைவிற்குப் பின் வேறு ஒருவருக்குப் பட்டம் சூட்டி, மீண்டும் தல யாத்திரை மேற்கொண்டார்.

இமயமலைக்குச் சென்று பல முனிவர்களையும் ரிஷிகளையும் சந்தித்தார். அற்புத சித்துக்கள் கைவரப்பெற்றார். மூப்பையும், பிணியையும் அகற்றி நீண்ட காலம் வாழ வல்ல காய கல்ப மூலிகையை அம்முனிவர்களின் ஆசியோடு பெற்றுக் கொண்டார். பின் மீண்டும் தல யாத்திரை மேற்கொண்டவர், இலங்கை உட்பட பல இடங்களுக்கும் சென்று இறுதியில் தமிழகம் வந்தடைந்தார்.

தமிழகத்தில் சேலம், கொல்லி மலை, போளூரில் உள்ள சம்பத் கிரி மலை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தங்கி தவம் செய்தார். பின் திருக்கோவிலூர் – திருவண்ணாமலை சாலையில் அமைந்திருந்த தபோவனத்தை தமது வாழ்விடமாகக் கொண்டார்.

ஞான ஒளியுடன் ஞானானந்தர்

எப்பொழுதும் சிரித்த முகம். எளிமையான காவி உடை. சற்று பருத்த தேகம். கருணை பொங்கும் கண்கள். அனைவரையும் அரவணைக்கும் தாய் உள்ளம் – என ஸ்ரீ சுவாமிகள் அன்பின் மறு உருவாய் இருந்தார். தம்மை நாடி வருவோரின் மன இருளை நீக்கி அவர்களின் உள்ளத்தில் ஆன்ம ஜோதியை ஏற்றி வைத்தார். மேலும் வந்திருப்பவர்களின் பக்குவ நிலைக்கேற்ப அவர்களுக்கு நல்வழி காட்டினார்.

கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான் என சுவாமிகள் வலியுறுத்தினார். அகண்ட நாம பஜனை ஒருவனை ஆண்டவனிடம் கொண்டு சேர்க்கும் என்பதும், நான், எனது என்ற அபிலாஷைகளை விடுத்து ஒருவன் தன் கடமைகளைச் செய்யும் போது அதுவே யோகமும்,  தியானமும், தவமும் ஆகிறது என்பது சுவாமிகளின் அருள் வாக்காகும்.

சுவாமிகளிடம் பல்வேறு அற்புதங்கள் செய்யும் ஆற்றல் இருந்தது. ஆனால் அவற்றை அவர் அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவை ஆன்ம முன்னேற்றத்தின் படிநிலைகளில் ஒன்று என்பதே அவரது கருத்தாகும். ஆயினும் சமயங்களில் தம்மை நாடி வந்த் சிலருக்கு அவர்கள் எதிர்காலம் குறித்து, வேலை, தொழில், திருமணம், குழந்தைகள் குறித்து, பின்னால் நடப்பதை முன்னரே தனது ஞான திருஷ்டியால் கணித்து சுவாமிகள் கூறியிருக்கிறார்.

சுவாமிகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவருக்கு பல முறை பற்கள் முளைத்துக் கீழே விழுந்தது என்றும், ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்சி அளித்திருக்கிறார் என்றும் அவரது வரலாறு தெரிவிக்கிறது.

இவ்வாறு பல்வேறு உண்மைகளை பக்தர்களுக்கு உபதேசித்து அவர்களை ஆன்ம வழிக்குத் திருப்பிய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் 1974 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று, மகா சமாதி அடைந்தார். திருக்கோவிலூர் அருகே உள்ள தபோவனத்தில் அவரது சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இன்றளவும் ஆன்ம ஞானம் தேடி வருவோர்க்கு அமுதூட்டும் அருள் ஆலயமாய் அது விளங்கி வருகிறது.

Monday, 14 March 2016

பாண்டிச்சேரி சித்தர்கள்

1. ஸ்ரீ லட்சுமண சுவாமிகள்
2. ஸ்ரீ  சிவாஞான பாளைய சுவாமிகள்
3. ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகள்
4. ஸ்ரீ வேதாந்த சுவாமிகள்
5. ஸ்ரீ அக்கா சுவாமிகள்
6. ஸ்ரீ தொள்ளைக்காது சுவாமிகள்
7. ஸ்ரீ நாகலிங்க சித்தர் சுவாமிகள்
8. ஸ்ரீ மௌலானா சாகிப்  சுவாமிகள்
9. ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள்
10. ஸ்ரீ கம்பளி  ஞான தேசிக சுவாமிகள்

11. ஸ்ரீ பெரியவருக்கு பெரியவர்  சுவாமிகள்
12. ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமிகள்
13. ஸ்ரீ சிவா சடையப்பர் சுவாமிகள்
14. ஸ்ரீ  சச்சிதானந்த சுவாமிகள்
15. ஸ்ரீ சக்திவேல் பரமானந்தா சுவாமிகள்
16. ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்
17. ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள்
18. ஸ்ரீ  மகன் படேசாகிபு  சுவாமிகள்
19. ஸ்ரீ வண்ணார பரதேசி  சுவாமிகள்
20. ஸ்ரீ அழகப்பர் சுவாமிகள்

21. ஸ்ரீ சிவபிரகாச சுவாமிகள்
22. ஸ்ரீ குருசுவாமி அம்மாள்
23. ஸ்ரீ தட்சணாமூர்த்தி  சுவாமிகள்
24. ஸ்ரீ மொட்டை சுவாமிகள்
25. ஸ்ரீ சிவாஞான பலசித்தர் சுவாமிகள்
26. ஸ்ரீ கணபதி  சுவாமிகள்
27. ஸ்ரீ குண்டலினி  சித்தர் சுவாமிகள்
28. ஸ்ரீ அருள்சக்தி அன்னை சுவாமிகள்
29. மண்ணுருட்டி சுவாமிகள்  
30. அரவிந்தர் அன்னை

Friday, 4 March 2016

“ஸ்ரீராம் பரதேசி ஸ்வாமிகள்”

ஒரு சிவன் கோயில்… அதன்  அருகே பிரும்மாண்டமான ஒரு மைதானம். அந்த மைதானத்தில் ஒரு பழைய  தேர். அதன் அருகில் பல சிறுவர்கள் களித்துக் கொண்டிருந்தனர். ஒருவன்  சக்கரத்தின்  மேல் ஏறினான், ஒருவன் அதற்குள் ஒளிந்து கொண்டான். இதையெல்லாம் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஒரு சித்த புருஷர்.  குழந்தைகளைப் பொறுத்த வரையில்  அவர் ஒரு தாடித்தாத்தா.

சித்தர் பேசினார் “குழந்தைகளே இந்தத் தேரையே இப்படித் தடவித் தடவிப் பார்க்கிறீர்களே!  இதை விடப் பல மடங்கு பெரிய தேரைப் பார்த்திருக்கீர்களா? அதுதான்  திருவாரூர் கோயிலின் தேர்”

“தாத்தா தாத்தா, நாங்கள் அதைப் பார்க்க வேண்டுமே எங்களை அழைத்துப் போங்கள்”

“போடா ராமு, அவர் என்ன ஏரோப்பிளேனா பறந்து போவதற்கு?”

“குழந்தைகளே,  இந்தத் தாத்தா இப்போது ஏரோப்பிளேன் மாதிரி பறந்து உங்களை அழைத்துப் போகப் போகிறேன். என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள்”

குழந்தைகளும் அவசர அவசரமாக அவர் தோளிலும் முதுகிலும் ஏறிக் கொள்ள   சித்தர் பறந்தார், ஒரு சில நிமிடங்களில் திருவாரூர் வந்து விட்டார்.  குழந்தைகள் பிரமிப்பில் மூழ்கினர். ஆவல் தீர அந்தத் தேரைப் பார்த்துக் களித்து பின் திரும்பவும் அவர் முதுகில்  அமர,  சித்தர் பறந்து முதலில் இருந்த இடத்திற்கே வந்தார்.


இதைச் சாமானிய மனிதனால் செய்ய முடியுமா? சந்தேகமில்லாமல் ஒரு சித்தரால்தான் செய்ய முடியும். அந்தச் சித்தர்தான் வில்லியனூரில் இருந்த “ஸ்ரீராம் பரதேசி ஸ்வாமிகள்” . ‘ரிஷி மூலம் நதி மூலம்’ கேட்கக் கூடாது என்பார்கள், இவரது  பெற்றோர்கள் யார் என்று தெரியாது.  இவர் நிச்சயமாக வட நாட்டைச் சேர்ந்தவர்தாம். இவர்  சிறு வயதில் தனியாக  தன் இஷ்டப்படி  திரிந்து  வந்தார், பாசம் என்பதே தெரியாமல் தானே வளர்ந்து வந்தார்.

ஒரு நாள் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இவர்   தன் இருப்பிடம் விட்டுக் கொஞ்சம் தூர காலாற நடந்து வரும் போது, அங்கு ஒரு முதியவரைச்  சந்தித்தார், அந்த முதியவர் ஆசையுடன் இவரை அழைத்தார்.

“என்ன செய்வது என்று  தெரியாமல் இப்படிச் சுற்றிக் கொண்டு இருக்கிறாயே! என் அருகே வா, உனக்கு ஞான ஒளி கிடைக்கும் நேரம் வந்து விட்டது. உனக்குப் பரப்பிரும்ம உபதேசம் செய்கிறேன்” என்று கூறி அவர் காதில் ஒரு மந்திரத்தை உச்சரித்தார். பின் அவர் உடல் முழுவதும் தடவினார். உச்சந்தலையில் முத்தம் கொடுத்தார், பின், “நீ பெரும் துறவியாய் வருவாய், போய் வா” என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார்.

ரமண மகரிஷியைப் போல் அப்போது அவருக்கு பதினாலு வயதுதான். அன்றைய தினத்திலிருந்து   அவர் மாறினார். வெறும் கோவணம் கட்டிக் கொண்டு பசி தாகம் மறந்து  தூக்கமில்லாமல் தியானத்தில் அமர்ந்தார். இவர் சென்று பூஜை செய்த ஊர் வில்லியனூர். திருக்காமீசர் என்ற ஈச்வரனும், கோகிலாம்பாள் என்ற திரு நாமமுடைய அம்பாளும் அருள் புரியும் கோயில்தான்   அது.

இந்த ஆலயத்திற்கு அவர் அடிக்கடி   வந்து அங்கப்பிரதட்சிணம் செய்வார்.  சில சமயம்  அவர் உடலே இதில் தேய்ந்து  விடும். அந்த இடம் தான் இன்று தெய்வீக ஸ்தலமாக, புனித ஜீவ பீடம் அமைந்த இடமாக விளங்குகிறது, இவரே ஸ்ரீராம் “பரதேசி சுவாமிகள்”. ஸ்ரீராம் பரதேசி ஸ்வாமிகளின் தபோவனம்  புதுச்சேரி வில்லியனூர் சாலையில் சுல்தான் பேட்டை அருகில் மூலக்கடை என்ற இடத்தில் இருக்கிறது.

இது ஒரு   காலத்தில்  வில்வமரக் காடாக இருந்ததாம். அங்கே சுயம்புவாக ஒரு லிங்கம்  தோன்றியதாம்.  அங்கு  ஒரு பசு தினமும் வந்து அதன் மேல் பால் சுரந்து  வழிபட்டதாம். பின்னர் சோழ மகாராஜா இந்தக் கோயிலைச்  சிறப்பாகக் கட்டி  வழிபட்டாராம்.

இந்தச் சித்தர் செய்த அதிசயங்கள் பல.  இவர் இடுப்பில்   வைக்கோலைக் கட்டிக் கொண்டு, திருக்கோயிலை வலம் வரும் போது சிறுவர்களைக் கூப்பிட்டுத் தன்னை இழுக்கச்   சொல்வார். பின் மண்ணை அள்ளி  எடுத்து  அதை மிட்டாயாக மாற்றி, அதை சிறுவர்களுக்கு வழங்குவார்.

ஒரு நாள், ஒரு இளைஞனைப் பாம்பு கடித்து விட்டது,    மக்கள் அவனைத் தூக்கி இவர் முன் கொண்டு  வந்து போட்டார்கள். இவர் கண் மூடித் தியானம் செய்து கடித்த பாம்பை வரவழைத்தார், பின்  அதை, தான் கடித்துப் பரப்பிய விஷத்தை உறிஞ்சித் தன்னுடைய அலுமினியத்   தட்டில் உமிழச் செய்தார்.  பாம்பும் அவர் சொன்னபடியே செய்ததை எல்லோரும் வியப்பால் சிலை போல் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

சித்தரோ அந்த விஷத்தைக்  குடித்து விட்டார், அவர் உடம்புக்கு ஒன்றும் ஆகவில்லை, இவர் தொட்ட இடமெல்லாம் வளமுற்றன. இவர் ஆசிகளால் பலர் பயனடைந்தனர். இவர் பிரும்ம நிலை அடைந்து விட்டால் தனக்குத் தானே ஸ்ரீராம் என்று கூறித் தன்னையே அர்ச்சித்துக் கொள்வாராம். ஆகையால் கூட இவரது பெயரும் ஸ்ரீராம் என்று வந்திருக்கலாம்.

சுவாமிகள் 1838-வது வருடம் மரங்கள் அடர்ந்த சோலை நடுவில் ஜீவபீடக் குழி பறித்து அதில் தான் அமர்ந்த பின், அதை குச்சிகளால் நிரப்பி, பின் மண் போட்டு மூடும்படி   கேட்டுக் கொண்டார். அந்த மண்ணை பிற்பாடு எடுத்தால் மிட்டாயாக மாறும் என்றார், அதே போல் சில சிறுவர்கள் அதைச் செய்து பார்க்கையில், அந்த மண் மிட்டாயாக மாறியது என்கிறார்கள் மக்கள்.

இதெல்லாம் நடந்து முப்பது ஆண்டுகள் ஓடிய பின். புதுச்சேரியில் பிரஞ்சு ஆதிக்கம் வந்த போது,  அந்த இடத்தில் ரயில்வே லைன் அமைத்து, அதற்குப் பின் ஒரு கட்டிடம் கட்டுவதற்காக கூலித் தொழிலாளி கடப்பாரையினால்  அந்த இடத்தைத் தோண்ட, இரத்தம் பீறிட்டது. தொழிலாளிகள் பயந்து வேலையை    நிறுத்தி விட்டனர்.

பின்  மேலதிகாரிகள் வந்து பார்த்த போது, அங்கே ஒரு ரிஷியைப் பார்த்தனர். அவரிடத்திலிருந்து “ராம்ராம்” என்ற ஒலி கேட்டது. அவரது உடல் தங்கம் போல் ஜொலித்தது. எல்லோரும்  அவரை வணங்கினர். பின் மருத்துவர் வந்து பரிசோதித்துப் பார்க்கையில் நாடித்துடிப்பு எல்லாம் ஒழுங்காய் இருந்ததாம். அவரை அப்படியே தூக்கி ஒரு கருங்கல் பீடம் அமைத்து அதற்குள் அமர்த்தி விட்டனர். பின் கோபுரம் கட்டி அற்புதமானதொரு ஜீவபீடத்தையும் ஏற்படுத்தி விட்டனர்.

ஜீவபீடம் உட்புறம்   எட்டுக் கோணங்கள் கொண்டது, உள்ளே “மஹாத்மா ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் சாலிவாஹன சஹாப்தம் 1868″ என்ற கல்வெட்டு உள்ளது. கோயிலில் இவருக்கு ஒரு சிலை உள்ளது.  நீண்ட ஜடாமுடி, தாடி, நீண்ட கைகள் , வலக்கால் மடக்கி இடக்கால் தொங்கும் நிலை. காந்தச்சுடர் கண்கள், அழகான மேனி, அவரது திருக்கோலத்தைப் பார்த்தால்  நம் கை  தானாகவே  கூப்பி வணங்க முற்படுகிறது, அங்கே அவ்வளவு சக்தி நிலவுகிறது.

இவரைத் தரிசித்தால் பல பிணிகள் அகலுகின்றன. சரும வியாதி  நீங்குகிறது. விஷக்கடிகளுக்கு இவரது விபூதி மருந்தாகிறது. பௌர்ணமியன்று அவர் வெளியே வந்து அந்தக் கோயிலை வலம் வருவதாக அங்கிருக்கும் மக்கள் சொல்லுகின்றனர். அந்த அற்புத மகானைக் காண   அவசியம் அங்கே சென்று வர வேண்டும்.

கேட்டதை வழங்கும் அந்தச் சித்தரின்  ஆசியைப் பெறுங்கள்.

ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகள் கோவில்

மானிடராய்ப் பிறந்த வர்களின் துர்க்குணங்களை மாற்றி, தூய்மையானவர் களாக்குவதற்காக அவதரித்த வர்கள் சித்தர்கள். இவர்கள் தனிமையை நாடுபவர்கள். பசித்திருப்பதையும் விழித்திருப்பதையும் பெரிதும் விரும்புபவர்கள்.

சித்தர்கள் பெரும்பாலும் சங்கேத மொழியில் பேசுபவர்கள். இவர்கள் பேசுவதைப் புரிந்துகொண்டால், நாம் பல ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம். மக்களுக்கு நன்மை புரியும் சித்தர்களை மக்கள் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். இவர்களின் சக்தியோ அளப்பரியது. இதற்கு உதாரணமாக எத்தனையோ சித்தர்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் சுமார் ஐம்பது சித்தர்களின் ஜீவசமாதிகள் உள்ளன என்று அறியப்பட்டுள்ளது. அவற்றில் ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகள் ஜீவசமாதியும் ஒன்று.

எப்போதும் இவர் ஒரு கம்பளிப் போர்வையைத் தன்மீது போர்த்திக் கொண்டிருந்தபடியால் மக்கள் இவரை கம்பளிச் சித்தர், கம்பளிச் சாமியார் என்று அழைத்தனர்.

இவர் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வந்தவர் என்று கூறப் படுகிறது. இவர் சுருட்டு பிடிக்கும் பழக்கம் உடையவராம். தன் ஆட்காட்டி விரலாலேயே சுருட்டைப் பற்ற வைத்துக் கொள்வாராம்.

ஒருமுறை இவரை கட்டுவிரியன் பாம்பு கடித்தபோது, அதன் விஷம் இவரை ஏதும் செய்யவில்லை. மாறாக அந்தப் பாம்புதான் இறந்து கிடந்தது. நீரில் மிதப்பது, நீருக்குள் வெகுநேரம் மூழ்கியிருப்பது, ஓரிடத்தில் மறைந்து வேறொரு இடத்தில் தோன்றுவது போன்ற சித்துக்களில் வல்லவர்.

வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் இவரை விரட்டினால் அன்று முழுவதும் வியாபாரமே நடக்காதாம். கடைக்காரர், கம்பளிச் சித்தரிடம் மன்னிப்பு கேட்ட பிறகே வியாபாரம் மீண்டும் சிறப்பாக நடைபெறு மாம். இவருக்கு ரசவாத வித்தையும் தெரியும் என்பர். ஆனால் இவர் பொருளாசை, பொன்னாசை கொண்டவரல்ல.

இந்த சித்தர் 1874-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், வெள்ளிக்கிழமை ஜலசமாதி ஆனார். மறுநாள், "கம்பளி தண்ணியிலே, கம்பளி தண்ணியிலே' என்ற அசரீரி கேட்ட மக்கள், இவருக்கு சமாதிக் கோவில் எழுப்பினர். சமாதிமீது சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தனர்.


தற்போது இந்த சமாதிக் கோவிலை, வெளிநாட்டில் இருந்து வந்து புதுச்சேரியில் நிரந்தரமாகக் குடியேறியுள்ள ஒரு மேல்நாட்டுக் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர்.

இக்குடும்பத் தலைவர் மேல்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், இவரது மனைவியும், மருமகளும் தமிழ்ப் பெண்மணிகளாவர். இவரது மகன் ஒரு தமிழ் மகனாகவே வளர்க்கப்பட்டவர்.

கம்பளிச் சித்தர் கோவில் விசாலமான நிலப்பரப்பைக் கொண்டதாக உள்ளது. அடர்ந்த மரங்கள், பூஞ்செடிகள் நிரம்பிய இக்கோவிலை தரிசிப்பது மிகவும் சிறப்பான விஷயம்.

கம்பளிச் சித்தரின் சமாதிக்குப் பின்னால் சிவபெருமானது மிக அழகிய வெண்கல உருவம் உள்ளது. இது நம் கண்களையும் சிந்தையையும் கவர்ந்திழுக்கிறது முன்புறம் இருக்கும் நந்தியின் கீழே கம்பளிச் சித்தரின் சிஷ்யர் அம்பலவாண சுவாமிகளின் சமாதி உள்ளது.

கம்பளிச் சித்தரின் ஜீவசமாதிக்கு நேரே- வெளியிலும் ஒரு பெரிய நந்தி உள்ளது.

பிராகாரத்தைச் சுற்றி வரும்பொழுது தனிச் சந்நிதிகளில் விநாயகரும் முருகப் பெருமானும் அருள்புரிகின்றனர்.

இங்குள்ள தெய்வச் சிலைகள் அனைத்தும் கலைநயம் மிக்கவை. முருகனுக்கு எதிரிலுள்ள மயில் வாகனமும் புதுமையாக வடிக்கப்பட்டுள்ளது.

முருகன் சந்நிதியைக் கடந்து வந்தால் கஜலட்சுமி தனிச்சந்நிதியில் அருளாட்சி செய்வதைக் காணலாம். வழக்கமாக, கஜலட்சுமியின் இருபுறங்களிலும் இரண்டு யானைகள் இருக்கும். இங்கு எதிரில் ஒரேயொரு யானை மட்டும் காணப்படுகிறது. இந்த யானையும் புதுமையாக- அழகாக வடிக்கப்பட் டுள்ளது.

அடுத்து சென்றால், ரிஷப வாகனத்தில் சிவபெருமானும் சக்தியும் வீற்றுள்ளனர். வெண்கலத்தினாலான இவர்களது சிலை நம் இதயத்தைக் கொள்ளை கொள்கிறது.

கோவிலின் வெளிப்புறம் உள்ள பரந்த வெளியில் ஒரு பக்கம் அம்மன் சிலையும், அதற்கு நேராக சிம்ம வாகனமும் உள்ளன. இன்னொரு பக்கம் பிள்ளையார், ஆஞ்சனேயர், சரஸ்வதி உருவங்கள் கலைநயத்துடன் காட்சி அளிக்கின்றன.

ஆஞ்சனேயரின் திருவுருவம் கனிவான முகத்துடன் காட்சி அளிக்கின்றது. இன்னொரு பக்கம், கம்பளிச் சித்தரின் அருளாசி பெற்ற மேலும் ஏழு சித்தர்களின் சமாதிகளும் உள்ளன. அகத்திய முனிவரின் சிலையும் உள்ளது.

பரந்த வெளியின் முகப்பில் காணப்படும் ஓர் அழகிய வெண்கலச் சிலை பிரமிப்பூட்டுகிறது. சிவனும் சக்தியும் ஒரு அக்கினி வளையத்தின் நடுவே ஆனந்தத் தாண்டவமாடும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

சிவபெருமானின் ஆட்காட்டி விரல்நுனி பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. கீழ்ப்பக்கம் தலை; உயரத் தூக்கிய கால்கள். சக்தியின் முகமும் கீழ்ப்பக்கம்; கால்கள் சிவனுடைய கால்களோடு பின்னிப் பிணைந்த திருக்கோலம்... மிக அழகு!

மலர்ந்த செந்தாமரைப் பூவின் இதழ்களுக்கு நடுவே மேற்கூறிய சிவன்- சக்தி உருவங்கள்! முப்பது அடிக்கு மேலே உள்ள இந்த ஆனந்தத் தாண்டவ சிலையின் கீழ்ப்பக்கம் ஒரு சிறிய கதவு உள்ளது. 

அக்கதவை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே- அதாவது சிவராத்திரி அன்று மட்டுமே திறப்பார்கள். அதற்கு முப்பது அடிக்குக் கீழே ஒரு பாதாள லிங்கம் இருக்கிறது. அந்த லிங்கத்திற்கு சிவராத்திரி அன்று மட்டுமே பூஜை செய்கிறார்கள்.

சிவராத்திரி அன்று இரவு பதினோரு மணிக்குமேல் கதவு திறக்கப்பட்டு, மேல்நாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே கீழே இறங்கிச் சென்று சிவபூஜை செய்கிறார்.

பாதாள லிங்கத்திற்கு சுமார் அரை மணி நேரம் பூஜை நடக்கிறது. பூஜை செய்தவர் திரும்பி வந்து அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்குகிறார். சிவன்- சக்தி ஆனந்தத் தாண்டவச் சிலையைச் சுற்றிலும் பெரிய வட்டவடிவமான பள்ளம் உள்ளது. இவ்வட்டத்தைச் சுற்றி பக்தர்கள் தங்கள் கையில் விளக்குகளை ஏந்தியபடி சிவநாமத்தைச் சொல்லிய வண்ணம் வேண்டிக் கொள்கின்றனர். சுமார் ஆயிரம் பேர், கைகளில் விளக்குகளைத் தாங்கியபடி சிவபெருமானைப் போற்றிய அந்தக் காட்சி, காணக் கிடைக்காத அபூர்வக் காட்சியாகும்.

பூஜை முடிந்த பிறகு, பக்தர்கள் பாதாள லிங்கத்தை தரிசிக்கலாம். இந்த அரிய வாய்ப்பு மகா சிவராத்திரி அன்று மட்டுமே கிடைக்கும்.

ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமி களின் சமாதிக் கோவில், புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில்- இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அருகில் ருத்ரபூமிப் பகுதியில் உள்ளது.

ஒருமுறையேனும் அங்கு சென்று வழிபட்டு வந்தால் மனதில் ஆனந்தமும் நிம்மதியும் நிச்சயம் பிறக்கும். இறைவனின் அருளும் சித்தரின் ஆசியும் நம்மை நலமாக வாழ்விக்கும்

சிவஸ்ரீ மகான் படே சாஹிப் சித்தர் பீடம் ( Sri Bade Saheb)

எத்தனையோ மகான்கள் இம்மண்ணில் அவதரித்து மக்களின் நலன் ஒன்றையே தமது குறிக்கோளாகக் கொண்டு உழைத்திருக்கின்றனர். தம்மை நாடி வரும் மக்களின் வல்வினைகளைப் போக்கி வாழ்வு சிறக்க வகை செய்திருக்கின்றனர். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் சிவ ஸ்ரீ படே சாகிப். பிறப்பால் இஸ்லாமியராகக் கருதப்படும் இம்மகானின் புனித வராலாறு மதம் கடந்து மனிதம் போற்றுவதாய் உள்ளது.

நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். அது போல இம்மகான் எங்கு, எப்போது தோன்றினார் என்பது குறித்து சரிவர அறிய இயலவில்லை. ஆனால் பல வெளிநாடுகளில் வசித்து பின்னர் இந்தியா நோக்கி, குறிப்பாக தமிழகத்தை நோக்கி வந்து வாழ்க்கை நடத்தியவர் என்பது தெரிகிறது. தமிழகத்தில் சில காலம் வசித்தவர் பின்னர் புதுச்சேரிக்குச் சென்று வசித்தார். கிட்டத்தட்ட நூற்றிற்கும் மேற்பட்ட சித்தர்களும், மகான்களும் புதுவையிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் ஜீவ சமாதியில் எழுந்தருளியுள்ளனர். புதுச்சேரியை அடுத்த திருக்கனூரில் சில காலம் வசித்து வந்த மகான், பின்னர் கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் பகுதியை தனது இருப்பிடமாக அமைத்துக் கொண்டார்.

நடுத்தர உயரம். சிவந்த நிறம். தலையில் ஒரு குல்லா. இடுப்பில் ஒரு அரையாடை. அருள் பொங்கும் முகம். கருணை ததும்பும் விழிகள். சதா ஏதேனும் மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வாய் என அவரது தோற்றம் மக்களுக்கு வியப்பைத் தந்தது. மகானோ மகா மௌனியாய் விளங்கினார். யாரிடமும் எதுவும் பேசமாட்டார். அவரது விழி நோக்கமே அவரை நாடி வருபவர்களுக்கு அரு மருந்தாய் விளங்கியது. தம்மை நாடி வருபவர்களின் நோய் நொடிகளைத் தீர்ப்பதில் மகான் தன்னிகரற்று விளங்கினார். விபூதி கொடுத்தே பலரது நோய்களைக் குணமாக்கினார்.

சின்னபாபு சமுத்திரத்தில் இருக்கும் மகான் அவ்வப்போது அருகில் உள்ள திருக்கனூருக்குச் செல்வார். சில சமயங்களில் மகான் எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது கூட யாருக்கும் தெரியாது. திருக்கனூரில் இருக்க மாட்டார். சின்னபாபு சமுத்திரத்திலும் இருக்க மாட்டார். சூட்சும உடலில் உலவிக் கொண்டிருப்பார். பல்வேறு சித்துக்கள் கைவரப் பெற்ற இவர், ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் காட்சி அளித்துள்ளார்.

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அருகில் ஒரு மண் கலயமும், சிறு பானை மற்றும் கொட்டாங்குச்சிகளும் இருக்கும். அதில் சில பச்சிலைகளும், புனித நீரும் இருக்கும். தம்மை நாடி வருபவரின் குறைகளை செவிமடுத்துக் கேட்பார். சிலரை அருகே உள்ள மகிழ மரத்தை அப்பிரத்ட்சணமாகச் சுற்றி வரும் படி சாடையாகக் கூறுவார். அவ்வாறு அவர்கள் சுற்றி வந்ததும் அவர்களின் கண்களையே உற்றுப் பார்ப்பார். சிலர் அந்த கருணை விழிகளின் தீட்சண்யம் தாங்காது மயங்கி விழுவர். சிறிது நேரத்தில் விழித்து எழுந்ததும் தமது நோய் முற்றிலுமாக நீங்கி இருப்பதை அறிந்து மகானை வணங்கி மகிழ்வர். சிலர் மகானை வணங்கி விபூதிப் பிரசாதம் பெற்று அணிந்ததுமே தமது நோய் நீங்கியதை அறிந்து மகானைத் தொழுவர். மற்றும் சிலருக்கு மகான் தன் கையால் ஒரு சிறு கொட்டாங்குச்சியில் நீரை அளிப்பார். அதை அருந்தியதுமே அவர்களைப் பீடித்திருந்த நோய்கள் விலகி விடும். குறைகள் அகன்று விடும். சிலருக்கு தமது கைகளால் தீண்டி ஆசிர்வதிப்பார். சிலருக்கு தாம் இமயமலைக் காடுகளில் சுற்றித் திரிந்த போது கண்டறிந்த பச்சிலைகளை அளித்து நோய் தீர்ப்பார். இவ்வாறு பலதரப்பட்ட மக்களின் நோயினை நீக்கும் ஒரு மகாபுருஷராக மகான் சிவஸ்ரீ படே சாகிப் விளங்கி வந்தார்.

’சாஹிப்’ என்றால் உயர்ந்தவர் என்பது பொருள். ’படே’ என்றால் பெரிய என்பது பொருள். தன் பெயருக்கேற்றவாறி மிகப் பெரிய சித்தயோகியாக, தவ புருஷராக விளங்கி வந்தார் சிவ ஸ்ரீ படே சாஹிப். சிவ ஸ்ரீ என்னும் அடைமொழிக்கேற்ப, இமயமலையில் தாம் தவம் செய்து கொண்டிருந்த காலத்தில் பல ஆண்டுகளாக, பல அடிகள் ஆழத்தில் புதைந்திருந்த உளி படாத “நிஷ்டதார்யம்” என்னும் கல்லை தனது ஆழ்நிலை தியானத்தின் மூலம் கண்டறிந்து, அதனை இறையருளால் வெளிக் கொணர்ந்து அழகிய லிங்கமாக உருவாக்கி, தம்மை நாடி வரும் மக்கள் வழிபடுவதற்காக, தாம் வசித்த இடத்திற்கு அருகிலேயே அருணாசலேஸ்வரர் ஆலயமாகப் பிரதிஷ்டை செய்தார்.

மகானின் அற்புதங்கள்
ஒருமுறை கட்டிலோடு ஒரு சிறுவனை நான்கு அன்பர்கள் வேகவேகமாக தூக்கிக் கொண்டு வந்தனர். மகானின் அருகே வந்ததும் கட்டிலை இறக்க முற்பட்டனர். அவ்வளவுதான் மகான் மிகுந்த சீற்றத்துடன் அருகில் உள்ள ஒரு கம்பினை எடுத்து வந்தவர்களை விரட்டத் தொடங்கினார். அவர்களும் பயந்து போய் கட்டிலை அப்படியே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். கட்டிலில் படுத்திருந்த சிறுவனும் பயந்து போய் மகானிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேகமாக ஓட ஆரம்பித்தான். மகானும் வேக வேகமாக அவனைத் துரத்த, அவனும் வேக வேகமாக ஓட ஆரம்பித்தான். உடனே மகான் அமைதியாக அருகில் உள்ள மரத்தடியில் அமர்ந்து விட்டார்.

மகான் ஏன் இப்படிச் செய்தார் என்று புரியாமல் ஓடிக் கொண்டே திரும்பிப் பார்த்தவர்கள், தங்களைத் தொடர்ந்து கட்டிலில் தூக்கி வந்த சிறுவனும் ஓடி வருவது கண்டு ஆச்சர்யம் கொண்டனர். அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். காரணம், பிறந்தது முதல் இதுநாள் வரை நடக்கவே நடக்காத, கால்கள் செயலிழந்த சிறுவன் அவன். அவனைக் குணப்படுத்தவே அவர்கள் மகானிடம் அவனைத் தூக்கிக் கொண்டு வந்தனர். தங்களிடம் கோபப்படுவது போல் நடித்து சிறுவனின் குறையைப் போக்கிய மகானின் கால்களில் வீழ்ந்து அனைவரும் வணங்கினர் மகானோ ஏதும் அறியாதவர் போல் எங்கேயோ பார்த்துக் கொண்டு மரத்தடியில் அமைதியாக வீற்றிருந்தார்.

இவ்வாறு பற்பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களுக்கு பல்வேறு நன்மைகள் புரிந்த மகானின் ஜீவ சமாதி விழுப்புரம் – பாண்டிச்சேரி சாலையில் சின்னபாபு சமுத்திரம் அருகே அமைந்துள்ளது. வியாழக்கிழமை தோறும் இந்து, இஸ்லாமிய மக்கள் இங்கே திரளாக வந்து வழிபடுகின்றனர். மனநோய், செய்வினை, ஏவல் கோளாறுகள் போன்றவை நீங்கும் தலம் என ஆலய அறிவிப்பு தெரிவிக்கின்றறது. இது இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சமாதி ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மகான்களைத் தொழுவோம்; மன வளம் பெறுவோம்.

Wednesday, 2 March 2016

300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை.

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர்,

ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல்

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே

பொருள்

அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவேbஅக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா

என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும்.

தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா

என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாம்.

அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.