Monday, 21 December 2020
முருகனின் ஆண்டிக் கோலம்
Wednesday, 17 April 2019
குளிகை என்றால் என்ன
தொட்டதைத் துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..?
இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான்.
யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் கேட்டுக் கொண்ட இராவணன் அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்...
அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்..”என்று யோசனை கூறினார்.
உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டான் இராவணன்.
ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர்.
இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர்.
தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டனர்.
அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள்.
வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை.
இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று இராவணன் தண்டிப்பானோ என்று அச்சம் கொண்டனர்.
இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். “இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும்.
அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும்.
நீங்களும் இராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம்’’ என்றார்.
சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால், தனது மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும் படி செய்தார்.
சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு குளிகன் என்று பெயரிடப்பட்டது.
குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தது.
குழந்தை பிறந்து முதன்முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளான் என்பதைக் குறிக்கும் வகையில் இடி, மின்னலுடன் அடர்மழை பெய்தது.
அதனால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான்.
அவனே இராவணனின் தவப்புதல்வனான மேகநாதன். பின்னாளில் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று, இந்திரனையே வென்று இந்திரஜித் என்று அழைக்கப்ட்டான்.
இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம்* *எனப்படுகிறது. தான் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்ததால், குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார்.
குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது.
குளிகை நேரத்தை, “காரிய விருத்தி நேரம்” என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார். அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்பட்டது. குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப் பட்டான்.
குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம்.
*சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம்....*
*இராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்களோ, அதேபோல குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்ற நம்பிக்கை வெகு காலமாக இருந்து வருகிறது.*
இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது.குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.
குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும்.
ஆனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது ஆக..தொட்டதைத் துலங்கச் செய்யுமாம் குளிகன் என்ற மாந்தனின் நேரம்.
Wednesday, 25 July 2018
அகத்தியர்க்கு உகந்தசீடர் தேரையர் ஜீவசமாதி - தோரணமலை :
" தோரணமலை ஸ்ரீ முருகன் திருக்கோவில் வரலாறு "
தோரணமலை - தென்றல் தவழும் தென்பொதிகை மலைத் தொடரில் திருநெல்வேலி மாவட்டத்தில், தென்காசி-கடையம் பாதையின் மேற்கில் யானை வடிவமாய் அமைந்துள்ளது . 1000 வருடங்களுக்கு முன்பு தேரையரின் மருத்துவமனையாக விளங்கிய இந்த தோரணமலை நாளடைவில் தூர்ந்துவிட்டது .இங்கு முருகனுக்கு அமைக்கப் படிருந்த கோயிலும் காணாமல்போய்விட்டது.
பின்பு அடியார் ஒருவர் கனவில் வேல் ஏந்திய சிறுவன் தோன்றி மலை மேல் உள்ள சுனையில் தான் கிடப்பதாகவும் தன்னை வணங்குமாறும் சொல்ல .முருகபெருமானை வணங்கி சுனையில் தேடியபோது அங்கே முருகன் சிலை கிடைத்தது .. அதனை குகைக்கு முன்பு (தற்போது உள்ள இடத்தில்) வைத்து வணங்க ஆரம்பித்தனர். இன்று வரை அந்த சிலையே மூலவராக வணங்கப்படுகிறது.
தோரணமலைக்கு தென்புறம் மலையில் இருந்து பாய்ந்து வருகிறது ராமநதி, மலையின் வடபுறம் ஜம்பு நதி தவழ்ந்து வருகிறது.இந்த இரு நதிகளுக்கு இடையேதான் தோரணமலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இரு நதிகளுக்கிடையே ஒரு கோவில் இருந்தால் அது சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும்.. அந்த வகையில் தோரணமலையும் தனிச்சிறப்பு பெற்றது.
அபூர்வ மூலிகைகளுடன், பக்தி மணம் கமழும் தோரணமலையில் 64 சுனைகள் உள்ளன. இவை அனைத்தும் நோய் தீர்க்கும் அரும்பெரும் சுனையாகும். இந்த சுனைகள் அருகே சித்தர்கள் தற்போதும் தங்கி தவம் புரியும் இடமாக கருதப்படுகிறது ..கடையத்து மருமகனான பாரதியார் கடையத்தில் வாழ்ந்த போது, தோரணமலை முருகனை ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று பாடி பரவசம் அடைந்தார்.
தோரணமலையில் முருகப்பெருமானை வழிபட்டு சித்த மருத்துவ ஆராய்ச்சி செய்து வந்த தேரையர் சுமார் 700 ஆண்டு காலம் தோரணமலையில் தவமிருந்து இறுதியில் அங்கேயே ஜீவசமாதி ஆகிவிட்டார்.. தற்போது மூலவராக வணங்கப்படும் முருகபெருமானின் பின்புறம் தான் தேரையர் சமாதியாகும்.. படத்தை பாருங்கள் . மூல ஸ்தானத்தில் அமர்ந்து தவம் செய்ய அருமையான அனுபவங்களை பெறலாம் ..
மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சன்னிதியில் பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்கும் முன் இவரை வணங்கிச் செல்வது நலம் பயக்கும். உச்சியை அடைய 926 படிகட்டுகள் ஏற வேண்டும். ஒரு காலத்தில் இந்த படிகட்டுகள் கிடையாது பாறையில் பெரும்விரலை மட்டும் ஊனும்படி ஓட்டை வடித்து வைத்திருப்பார்கள் அதன் வழியாகத் தான் ஏற வேண்டும்.ஆனால் தற்போது படிக்கட்டு வழியாக ஏறிச்செல்லலாம்.
தோரணமலை படிக்கட்டுகளை ஏறிச் செல்வது இந்த பிறவியில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் கடந்து விட்டதை உணர்த்துகிறது. வழியில் சுயம்பாக அமைந்த சிவபெருமானை தரிசிக்கலாம்.இந்த இடங்கள் எல்லாம் நல்லசுவாச காற்றும், அருமையான நறுமணம் தரும் மூலிகை காற்றும் நமது உடல் பிணியை போக்கும் வண்ணம் நம்மை தொட்டு செல்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை அழகையும் அதில் தவழ்ந்து வரும் மேகக்கூட்டங்களையும், ரசித்துக்கொண்டே உச்சியை அடையலாம்.
முருகப்பெருமானின் இடதுபுறம் சற்று உயரமான இடத்தில் இருக்கும் சுனையில் இருந்து தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்துக்கு தண்ணீர் எடுத்துவரப்படுகிறது. மலை உச்சியில் பெரும் பாறைக்கு இடையில் இப்படி ஊற்று பொங்கி வருவதும், கடும் கோடையிலும் இது வற்றாமல் இருப்பது இறையருள் மட்டுமின்றி ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். மலை மீது ஏறி இதில் குளிப்பது ஆனந்தமாக இருப்பதோடு அருளும் கிடைப்பதை நம்மால் உணர முடிகிறது .
முருகப்பெருமானின் வலதுபுறம்பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு துவாரம் ஒன்று உள்ளது. அது சாதாரண துவாரம் அல்ல அதுவும் ஒரு சுனை தான் .அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் உள்ளது. அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதியும் உள்ளது.
ஓங்கி உயர்ந்த மலை, அடிவாரம் தொடங்கி மலை உச்சி வரை ஆங்காங்கே சுனைகள், அடிவாரத்தில் சப்த கன்னிகையர் கோவில், மலையின் பின்புறம் சாஸ்தா கோவில், மலை உச்சியில் முருகன் கோவில் என ஆன்மீகப்பிரியர்களுக்கு தோரனமலை நிச்சயம் ஆனந்தத்தைத்தரும்! ஒருமுறை வந்து பாருங்கள் ..
அகத்தியர்க்கு உகந்த சீடர் தேரையர் :
அகத்தியருடைய மாணாக்கர்களில் ஒருவராக விளங்கியவர் தேரையர் ஆவார். இவர் மருத்துவ ஞானம் மிகுந்தவர். சித்த வைத்திய முறையில் தேரையர் கண்ட உண்மைகள் பெரிதும் உபயோகமாக உள்ளது . மனிதரின் தேக உணர்வையும், குரலின் தன்மையையும் வைத்தே நோய் நிர்ணயம் செய்து விடும் திறமை பெற்றவர். அவ்வண்ணமே சிகிச்சை முறைகளிலும் இவருக்கு அதிக வல்லமை இருந்தது. இவர் பதினாறு நூல்கள் இயற்றியுள்ளார்.
தேரையர் சித்தர்களின் கூட்டத்தில் மிகவும் தனித்துத் தெரியும் ஒருவராவார். தேரையர் என்பது, காரணப் பெயர். உண்மையில் இவரது இயற்பெயர் ராமதேவன் என்கிறது அபிதான சிந்தாமணி. அகத்தியர்க்கு முன்பு தர்மசௌமினி எனும் முனிவர்தான் ராமதேவனின் ஞானகுருவாக இருந்தார் . தர்மசௌமினி குறுகிய காலத்திலேயே ராமதேவன் ஒரு சித்தயோகி என்பதையறிந்து, தன்னிடம் இருந்தால் காலம்தான் வீணாகும் என்பதை உணர்ந்து கொண்டுவிட்டார். காரணம், தர்மசௌமினியிடம் ராமதேவர் கேட்ட கேள்விகள், அவரை திணறடித்துவிட்டன. ‘‘ராமதேவா.... உனக்கான பதிலை அகத்திய முனிவரால்தான் தரமுடியும். அவர் ஒருவர் தான் முனிவருக்கு முனிவர்_சித்தருக்கு சித்தர்’’ என்று தர்மசௌமினி, ராமதேவனுக்கு வழிகாட்ட, ராமதேவனும் அகத்தியரின் பாதங்களில் போய் விழுந்து மாணாக்கராய் ஏற்றுக்கொள்ளச் செய்கிறார் .
ராமதேவன், அகத்தியரின் வைத்திய ஞானம் முழுவதையும் ஈடுபாட்டுடன் கற்றுத் தெளிந்து விட்டார். சொல்லப் போனால், அவர் குருவை வெல்லும் ஒரு சிஷ்யன் என்கிற அளவிற்குத் தேறிவிட்டார். இப்படித் தேறியதாலேயே காலமும் இவரை தேரையர் ஆக்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அளித்தது.
காசி மன்னன் தலைவலியால் அவதிப் பட்டுக் கொண்டிருந்த போது அகத்தியர் அங்கு வர அவரிடம் தன் வேதனையைக் கூறியவன் அதை நீக்க வேண்டினான். அகத்தியர் நீ தூங்கும்போது ஒரு தேரைக்குஞ்சு உன் மூக்கு வலியாக உள்ளே சென்று மூளைப்பகுதியை அடைந்ததுதான் காரணம். இருந்தாலும் கவலைப்படாதே அதை நான் சரிசெய்கிறேன் என்றார் அகத்தியர். மன்னனை மயக்க நிலையில் ஆழ்த்தி சிகிச்சை தொடங்கப்பட்டது. சில நொடிகளில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. அங்கு தேரை இருந்தது. அதை எப்படி எடுப்பது என்று நினைத்தபோது ராமதேவர் தண்ணீரை தேரையின் கண்ணில் படுமாறு வைக்க அது குதித்தோடியது. அகத்தியர் சந்தானகரணி எனும் மூலிகையினால் மன்னனின் மண்டை ஓட்டை மீண்டும் பழையபடி மூடினார். ராமத்தேவரை கட்டித்தழுவி பாராட்டினார். இந்த நிகழ்வுக்குப்பின் ராமத்தேவர் தேரையர் என்றழைக்கப்பட்டார்.
சித்தர் இராமதேவர்தான் ஒரு ஊமை பிராமணனாக பிறந்து ஔவையார் மூலம் அகத்தியரிடம் அழைத்துவர அகத்தியர் அச்சிறுவனை தன்னுடைய மாணாக்கனாக ஏற்றுக்கொண்டார். பின்பு அச்சிடனுக்கு தனக்குத் தெரிந்த சித்திகளையெல்லாம் போதித்தார். அவருடைய ஊமைத் தன்மையைப் போக்கினார். அப்போது தொல்காப்பியம் என்ற நூலை எழுதி தொல்காப்பியர் ஆனார். என்றெல்லாம் சொல்லப்படுகிறது .
மதுரை பண்டியனின் கூன்முதுகை தாம் சரி செய்வதாகக் கூறி தன் சீடர்களிடம் சில மூலிகைகளைக் கொண்டுவரச் சொல்லி அவற்றை இடித்து சாறு பிழிந்து ஓர் பாத்திரத்தில் உற்றி கொதிக்க வைத்தார். அப்போது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே தேரையரிடம் அடுப்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிச் சென்றார்.கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவிபட்டு ஆசிரமத்தின் மேல் கூரையிலிருந்த ஓர் வளைந்த மூங்கில் நிமிர்ந்ததைக் கண்ட தேரையர் மூலிகைச் சாற்றை அடுப்பிலிருந்து இறக்க, பின்பு அங்கு வந்த அகத்தியரிடம் மூங்கில் நிமிர்ததைக் காட்டி தான் இறக்கி வைத்ததை கூற தேரையரை பாராட்டினார் அகத்தியர். அந்த மூலிகைத் தைலத்தால் மன்னரின் முதுகு கூன் நிமிர்ந்தது.
ஒருமுறை வயிற்றுவலி ஒருவருக்கு ஏற்பட அகத்தியர் மருந்து கொடுத்தார், சரியாகவில்லை. தேரையரை அழைத்து வைத்தியம் செய்யச் சொன்னார். தேரையர் பார்த்து ஒரு கடுக்காய் குச்சியை எடுத்து வாய் வழியாக உள்ளே செலுத்தி அதன் துளைவழி மருந்தை செலுத்தி வயிற்றுவலியை சரி செய்தார். அகத்தியர் கொடுத்த மருந்து வேலை செய்யாததற்கு காரணம் வாயின் பற்களில் உள்ள விஷத்தன்மையே என்பதை அறிந்து தேரையர் மருந்து அவ்வாறு கொடுத்தார் என்பதை அகத்தியர் உணர்ந்தார். தேரையரின் திறமையை வெளி உலகுக்குத் தெரியப்படுத்த அவரை அழைத்து விருப்பமான இடங்களுக்குச் சென்று மக்களுக்கு நன்மை செய்ய பணித்தார்.
தேரையர் அணமயம் என்ற காட்டுப்பகுதியில் தவம் செய்து அங்குள்ள அடியவர்களின் பிணியை நீக்கி வந்தார் . அச்சமயத்தில் அகத்தியருக்கு கண்பார்வை குறைந்து கொண்டு வந்தது. சீடர்களுக்கு தேரையரின் நினைவு வர அகத்தியரிடம் அனுமதி வாங்கிச் சென்றனர். அகத்தியர் புளியமரத்தடி நிழலில் உறங்கிச் செல்க என்றார். வெகு நாட்களுக்குப்பின் அணமயம் காட்டை அடைந்த சீடர்கள் தேரையரை சந்தித்தனர். விபரம் அறிந்தார். சீடர்கள் இரத்த வாந்தி எடுக்க தேரையர் அவர்களை வேப்பமரத்தடியில் தூங்கி செல்லுமாறும் தான் இரண்டு நாளில் வருவதாகவும் சொன்னார். திரும்பவந்த சீடர்கள் உடல் நலத்துடன் இருப்பதை அறிந்த அகத்தியர் இது தேரையரின் வைத்தியம் என்பதை உணர்ந்தார். தேரையர் வந்தார். அகத்தியரின் கண்ணை பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து சரி செய்தார்.
ஒருநாள் அகத்தியர் தேரையரை அழைத்து “தேரையா, எனக்கு கண்வெடிச்சான் மூலிகை வேண்டும்” என்றார். கண்வெடிச்சான் மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறித்தவன் கண்கள் பறிபோய்விடும், யாரும் தப்ப முடியாது. ஆனால் தேரையர் தயங்காமல் இதோ கொண்டுவருகிறேன் என்று காட்டுக்குள் சென்றார். மூலிகையைக் கண்டார். ஆனால் அதனைப் பறிக்காமல் அங்கேயே அமர்ந்து கண்களை மூடி தேவியை தியானம் செய்தார். “கவலைப்படாதே தேரையா! மூலிகையை நான் பறித்துத் தருகிறேன்” என்ற குரல் கேட்டு விழித்த தேரையரின் முன் கண்வெடிச்சான் மூலிகை இருந்தது. தேவிக்கு நன்றி கூறிவிட்டு, அகத்தியரிடம் மூலிகையைக் கொடுத்தார். அகத்தியர் மிகவும் மகிழ்ந்து, “நான் வைத்த எல்லா சோதனைகளிலும் நீ தேறிவிட்டாய். நீ அறிந்த மூலிகைகளைப் பற்றி ஒரு நூல் எழுது” என்றார். குருவின் கட்டளைப்படி அவரின் ஆசிகளுடன் ‘தேரையர் குலைபாடம்’ என்ற நூலை இயற்றினார். நெடுங்காலம் மருத்துவ சேவை செய்த தேரையர் பொதிகை சார்ந்த தோரண மலையில் தவம் செய்து அங்கேயே ஜீவ சமாதியடைந்தார்.
ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடைசி லிங்கமாகிய ஈசான்ய லிங்கத்தின் அருகே ஜீவசமாதி அமைந்துள்ளது. ஞான தேசிகர் மடம் என்று அழைப்பர்.காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை மற்றும் மாலை 3.00 மணி முதல் 6.00 மணிவரை நடை திறந்திருக்கும். கடந்த ஒரு வருடகாலமாக மஹான் முக்குபொடி சித்தர் இங்குதான் தங்கி இருந்தார்.
ஒருமுறை ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள் இங்கு தவம் செய்துகொண்டிருந்தார். தவத்திலிருக்கும் இவர் முன்னே ஒரு பெண்மணி நித்தமும் ஒரு பித்தளை செம்பு நிறைய பால் கொண்டுவந்து வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் சுவாமி அந்த பாலில் பாதியை குடித்து மீதியை அந்த பெண்மணியிடம் கொடுத்து "இந்த பாலை ஏதாவது ஒரு இடத்தில் ஊற்றி தோண்டிப்பார் என்றார்.
அந்தப்பெண்மணியும் அப்படியே செய்ய பொற்காசுகள் கொண்ட புதையல் கிடைத்ததாம். அப்பெண்மணி பலரிடம் சொல்லக்கேட்டு ஊரே பால் செம்புடன் சுவாமியிடம் தவம் செய்ய விடாது தொந்தரவு செய்தனர். இது நித்தமும் தொடர சுவாமி அண்ணாமலையாரை நோக்கி "என் சித்துவேலை எனக்கே வலையாகி விட்டது. என்னை காப்பாற்றுங்கள்" என வேண்டினார்.
அன்றிலிருந்து அவர் கண்மூடி தவம் செய்யும் வேளையில் அவரை யாரும் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் அவர் கண்திறந்தால் அருகில் வந்துவிடுவர். என்ன நடக்கிறதென்று சுவாமிக்கு தெரியாது மீண்டும் அண்ணாமலையாரை வேண்ட சுவாமிக்கு காட்சி தெரிகின்றது. எப்பொழுதெல்லாம் இவர் கண்மூடி அண்ணாமலையாரை நோக்கி தவம் இயற்றுகிறாரோ அப்பொழுதெல்லாம் இவரது இரு புறமும் இரு புலிகள் வந்துவிடுகிறது. மக்கள் நெருங்குவதில்லை. கண் திறந்தவுடன் புலிகள் மறைந்துவிடுகிறது. மக்கள் நெருங்கிவருகின்றனர். அந்த இரு புலிகள் வேறு யாரும் அல்ல. ஸ்ரீ அண்ணாமலையாரும் ஸ்ரீ உண்ணாமுலை தாயாரும் காவலாக நின்று முக்திக்கு வழி செய்தனர். இப்படிப்பட்ட ஒரு சித்தரின் ஆற்றலை பெற கிரிவலம் செய்யும் ஒவ்வொருவரும் இந்த நினைப்புடன் இவரது ஜீவசமாதியில் தரிசனம் செய்வோம்.
காகபுஜண்டர்
சித்தர்களில் முதன்மையானவர்கள் 18 பேர்களாக இருந்தாலும்,சித்தர்களின் எண்ணிக்கை எண்ணிலாக் கோடி .
அகத்தியருக்கும் முற்பட்ட சித்தர் ஒருவர் இருக்கிறார் எனில்,அவர் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆவார்.
பல கல்பகோடியுகங்களாக இமயமலையில் வசித்து வந்த இவரை தமிழ்நாட்டுக்கு வர வைத்தவர்கள் சித்தர்களே!
இவர் இன்றைய மதுரையை ஒட்டியுள்ள திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் வெகுகாலமாக தவம் செய்திருக்கிறார்.
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் ஏராளமான மகான்களின் ஜீவசமாதிகள் ஆத்மத்துடிப்புடன் இயங்கிவருகின்றன.
இன்னும் பல மகான்களின் நடமாட்டம் இன்றும்,என்றும் இருக்கிறது
இவரது அருளால் உயர்ந்த சிவநிலையை எட்டியவர்கள். ஏராளம். சூட்டுக்கோல் சுவாமிகள் அவர்களில் ஒருவர்.
திருப்பரங்குன்றம் தியாகராஜ பொறியியல் கல்லூரிக்கு அருகில், சூட்டுக்கோல்மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி ஒரு விநாயகர் சன்னதிக்கு கீழே அமைந்திருக்கிறது;இந்த விநாயகரை ஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் பல யுகங்களாக வழிபட்டு வந்திருக்கிறார்.
ஸ்ரீகாக புஜண்டர் சித்தரின் அருளாசியைப் பெற ஒவ்வொரு மாதமும் வரும் ஆயில்யம் நட்சத்திர நாளில் இங்கே வருகை தந்து சூட்டுக்கோல் மாயாண்டுசுவாமிகளின் ஜீவசமாதி அல்லது அவர் பல ஆண்டுகளாக தியானம் செய்த குகையில் ஒரு மணி நேரம் வரை சிவமந்திரம் ஜபித்து வர வேண்டும்.
பூர்வ புண்ணியம் உள்ளவர்கள் ஆயில்யம் நிற்கும் நாளில் இங்கே இரவில் தங்கி,தூங்காமல், ஒரு இரவு முழுவதும் சிவமந்திரம் ஜபித்து வரலாம்.
இவ்வாறு மாதம் ஒரு நாள் வீதம் விடாமல் ஜபித்துவர அவரவர் பூர்வஜன்ம மனவலிமைப்படி ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் அருளாசி, கிட்டும்.
ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் அவதார நட்சத்திரம் பங்குனி மாத ஆயில்யம் நட்சத்திரம்.
மதுரையைத் தவிர,தமிழ்நாட்டில் வேறு சில இடங்களில் ஸ்ரீகாகபுஜண்டரின் சித்தவாசம் இருந்திருக்கிறது.அந்த இடங்களிலும் இதே போல முயற்சி செய்து பார்க்கலாம்.
1.சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் வட்டத்தில் இருக்கும் ஆச்சாள்புரம்.இங்கே திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் நடந்திருக்கிறது.இங்கே இன்னும் ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.
2.கடலூர் மாவட்டம் சிதம்பரம் டூ கடலூர் மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் ஆலப்பாக்கத்தில் ஸ்ரீபுஜண்டலிங்கேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.இங்கே பலருக்கு ஞான உபதேசம் அளித்திருக்கிறார்.
3.காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி நெடுஞ்சாலையில் மாங்கல் கூட்ரோட்டிலிருந்து புதுப்பாளையம் செல்லும் பாதையில் சோதியம்பாக்கம் இருக்கிறது.இங்கே சிவாகமவிதிப்படி ஸ்ரீகாகபுஜண்டரின் ஆலயம் அமைந்திருக்கிறது.
4.விழுப்புரம் அருகில் சின்னச்சேலம் அருகில் இருக்கும் ஊர் தென்பொன்பரப்பி.இங்கு காகபுஜண்டர் கோவில் இருக்கிறது.
ஜீவசமாதியடையாத ஒரே சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் தான்.
5.நாகப்பட்டிணம் மாநகரத்திலிருந்து சுனாமிப் பாலம் வழியாகச் சென்றால் வருவது கோரக்க சித்தரின் ஜீவசமாதி ஆகும்.
இங்கிருந்து வேளாண்கன்னிக்குச் செல்லும் பாதையில் சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்குப் பயணித்தால் சாலையின் மேற்கே ரயில்வே கேட் தாண்டித் தெரிவது ஸ்ரீபால்மொழி அம்மன்கோவில் ஆகும்.இங்கே ஸ்ரீகாகபுஜண்டர் பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக(யுகங்களா) தவம் செய்திருக்கிறார்.
இங்கே தான் உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் படைத்த ஆதி பரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி என்ற வாலைப்பெண்ணைத் தரிசித்தார் ஸ்ரீகாகபுஜண்டர்.
6.ராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில், 20 கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது திருவழுக்குப்பாறை, ஆகும்.
வனத்துறை அனுமதியோடு மலை மேலே பத்து கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்.இங்கே அமுதகலசத்துடன் வாலைத் தெய்வம் அருள்புரிந்து வருகிறார்.இங்கேயும் ஸ்ரீகாகபுஜண்டர் பல காலமாக தவம் செய்திருக்கிறார்.
7.திருப்பரங்குன்றம்மலைக்குப் பெயரே புசுண்டர் மலையே.இங்கே ஏராளமான சித்தர்கள் துறவிகளின் ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.
இங்கேயும் பல காலமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.
8.நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது.இங்கே மனிதகாலடித் தடம் படாத இடங்கள் இருக்கின்றன.
இந்த வனத்தினுள் காகபுஜண்டர் குகை இருக்கிறது.(பொழுதுபோக்காகச் செல்ல முயற்சி செய்ய வேண்டாம்;விபரீத விளைவுகள் உண்டாகும்.ஜாக்கிரதை!!)
9.இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் உத்திரகோசமங்கையில் அமைந்திருக்கும் சிவாலயத்தில் ஸ்ரீகாகபுஜண்டர் பலகாலம் தவமிருந்து ஜோதி வடிவாக சிவனுடன் ஐக்கியமாகியிருக்கிறார்.
10.புதுவை மாநிலம் காரைக்கால் அருகில் இருக்கும் திருமலைராயன் பட்டிணத்தில் இருக்கும் ஆயிரங்காளியம்மன் கோவிலில் பல யுகங்களாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.
11.சிவகெங்கை மாவட்டத்தில் இருக்கும் திருப்பத்தூர்.இவ்வூருக்கு அருகில் இருக்கும் வைரவன்பட்டி.பூமி படைக்கப்பட்டதிலிருந்து ஸ்ரீகாலபைரவர் இங்கே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவராக அருள்பாலித்து வருகிறார்.இங்கே தவம் செய்யாத சித்தர்களே கிடையாது.ஸ்ரீகாகபுஜண்டரின் தவ ஆற்றல் இன்னும் இங்கே பரவிக்கிடக்கிறது.
12.அண்ணாமலைக்கு அருகில் காஞ்சி (காஞ்சிபுரம் அல்ல) செல்லும் வழியில் 13 வது கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது காகா ஆஸ்ரமம்.ஸ்ரீகொல்லிமலைச் சித்தர் காகபுஜண்டரின் சீடர் தருமலிங்கசுவாமிகளின் ஆசிரமம் இது.இங்கே காகபுஜண்டரின் ஆலயம் மிக அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது.
13.கோயம்புத்தூரில் இருக்கும் மாஸ்திக்கவுண்டன்பதி என்ற ஊரில் பாலரிஷி ஆஸ்ரமம், அமைந்திருக்கிறது.இங்கே ஸ்ரீகாகபுஜண்டரை உபாசனை செய்யும் பெண் சித்தர் ஸ்ரீவிஸ்வசிராஸினி ஒரு நாளுக்கு 20 மணி நேரம் ஜெபதவத்தில் ஈடுபட்டு வருகிறார்.இங்கே சென்று சிவமந்திரம் ஜபித்து வர,ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.
14.கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் வெள்ளியங்கிரி மலை ஏராளமான சித்த ரகசியங்களை தன்னுள் வைத்திருக்கிறது.தகுந்த குருவின் துணையோடு தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து சிவமந்திரம் ஜபிக்க,வெகு விரைவாகவே ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.
15.சீர்காழி சட்டநாதர் திருக்கோவிலில் அஷ்டபைரவர்கள் வாழ்ந்து வருகிறார்.இங்கே இன்னமும் சூட்சுமமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.
16.நாகநாத சித்தரும்,அவரது சீடர் யோகி குமரகுருவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆலயத்தை கொழும்பில் கட்டியுள்ளனர்.தற்போது திரு.குமரகுரு என்பவரின் குடும்பம் அந்தக் கோயிலை நிர்வகித்துவருகிறது.
இலங்கையில் இருக்கும் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் கோயில்அவர் இலங்கையில் தவம் இருந்ததை ஊர்ஜிதம் செய்கிறது.
Wednesday, 21 June 2017
காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி
திண்டுக்கல்லுக்கு அருகே திருமலைக்கேணி என்கிற அழகான கிராமத்தில் காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. தான் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ அன்பர்களை நல்வழிப்படுத்தியும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கியும், பிறவிப் பிணிகளை நீக்கியும் வாழ்ந்த ஒப்பற்ற மகான்-காமாட்சி மவுனகுரு சுவாமிகள். முருகப் பெருமானின் தனிப்பட்ட தரிசனத்தை ஒரு முறையும், ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானையின் இணைந்த தரிசனத்தை ஒரு முறையும் பெற்றவர் இவர் இன்றைக்கும் தன் சன்னிதி தேடி வரும் எந்த ஒரு பக்தரின் பிரார்த்தனையையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறார் இந்த சித்த புருஷர்.
காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் சிஷ்யரான குழந்தைசாமியின் சமாதியும் குழந்தைசாமியின் சிஷ்யரான சச்சிதானந்த சுவாமிகளின் சமாதியும் காமாட்சி மவுனகுரு சுவாமிகள் ஜீவ சமாதியை ஒட்டியே அமைந்துள்ளன. காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் குருபூஜை ஆடி பூராடத்தன்றும், குழந்தைசாமியின் குருபூஜை ஆவணி பூசத்தன்றும். சச்சிதானந்த சுவாமிகளின் குருபூஜை புரட்டாசி அசுவினி அன்றும் பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த தினங்களில் விசேஷ அபிஷேகங்களும் அலங்காரங்களும் அன்னதானமும் நடைபெறும். திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றி உள்ள பல பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கூடி குருமார்களின் அருள் பெறுவது வழக்கம்.
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருமலைக்கேணி, நத்தத்தில் இருந்து மணக்காட்டூர் வழியாக திருமலைக்கேணி வந்தால் 24 கி.மீ.! திண்டுக்கல்லில் இருந்து செங்குறிச்சி செல்லும் நகரப் பேருந்துகளும் செந்துறைக்குச் செல்லும் புறநகர் பேருந்துகளும் திருமலைக்கேணி வழியாகச் செல்லும். காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி அருகே சுவாமிகளுக்கு தரிசனம் தந்த-ஸ்ரீமுருகப் பெருமான் திருக்கோயில், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. முருகப் பெருமானே காமாட்சி மவுனகுரு சுவாமிகளைக் கூப்பிட்டு வந்து, இங்கே உட்கார் என்று இந்தச் சிறு மலையை அடையாளம் காட்டியதாக அவரது பக்தர்கள் சொல்கின்றனர். சுவாமிகளுக்கு முருகப் பெருமான் காட்சி கொடுத்த இடமும் ஸ்ரீவள்ளி மற்றும் ஸ்ரீ தெய்வானையின் தரிசனம் பெற்ற வள்ளி சுனையும் அருகிலேயே உள்ளன.
இனி, காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் சரிதத்தைப் பார்ப்போம்? திண்டுக்கல் மாவட்டத்தில் செங்குறிச்சி கிராமத்துக்கு அருகே உள்ளது வல்லம்பட்டி என்கிற குக்கிராமம். விவசாயத்தையே பிரதானமாகக்கொண்டு வல்லம்பட்டியில் வாழ்ந்து வந்தவர்கள் குப்புசாமி- குப்பாயி அம்மாள் தம்பதியர். இறை அருளாலும். மகான்கள் ஆசியாலும் இந்த தம்பதிக்கு கி.பி. 1875-ஆம் ஆண்டு முதல் குழந்தையாக நம் சுவாமிகள் அவதரித்தார். பெற்றோரின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஆட்பட்டு, சுவாமிகள் வளர்ந்து வந்தார். தந்தையின் விவசாயப் பணிகளுக்கும் தாயின் விட்டு வேலைகளுக்கும் உதவியாக இருந்து வந்தார் சுவாமிகள். அந்தக் கால வழக்கப்படி இளம் பிராயத்திலேயே சுவாமிகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். செம்பாயி அம்மாள் என்பவரைக் கரம் பிடித்தார் சுவாமிகள். ஒரு சில வருடங்கள் கழிந்த பின்னர் செம்பாயி அம்மாளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. தாத்தாவின் பெயரை நினைவுபடுத்தும் விதமாக குப்புசாமி என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்தனர்.
இளம் வயதில் இருந்தே முருக பக்தியில் திளைத்திருப்பது காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் வழக்கம். எத்தனை காலத்துக்குத்தான் தன் பக்தனைத் தள்ளி வைத்துக்கொண்டே பார்ப்பார் முருகப் பெருமான்? சுவாமிகளைத் தன் பக்கம் இழுக்கவேண்டிய வேளை வந்ததும். சுவாமிகளின் மனதில் புகுந்தார் முருகப் பெருமான் பிறகென்ன... உணவு சுவைக்கவில்லை; ஆடை பாரமானது இல்லறம் இனிமை இழந்தது. மனைவியையும் மகனையும் மனம் மறந்தது; தான் தேடவேண்டிய சுகம் இல்லறம் அல்ல என்பதை சுவாமிகள் உணர்ந்துகொண்டார். 1905-ஆம் வருடம் (தமிழ் வருடம்; விசுவாச) கார்த்திகை மாதம் 12-ஆம் தேதி சுவாமிகள் துறவு பூண்டார் என்று அவரது சரிதம் சொல்கிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கை முறையே மாறியது. சித்து விளையாடல்களும் அருளாடல்களும் நிகழ்த்தி பக்தர்களுக்கு ஆன்மிக போதனைகளை வழங்கினார். மலைப் பகுதிகளில் ஆங்காங்கே நேரம் போவது தெரியாமல் அமர்ந்து கடும் தியானம் மேற்கொண்டார். முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களில் முழு நேரத்தைச் செலவழித்தார். எங்கெங்கோ சுற்றித் திரிந்த சுவாமிகளை-அவரது முப்பது வயதில்- என் கோயிலுக்கு வா என்று முருகப் பெருமான் அழைத்தார். அந்த கோயில்தான்-சுவாமிகளின் சமாதி அருகே இருக்கும் ஸ்ரீமுருகப் பெருமான் திருக்கோயில். அழகான கோயில்.
காமாட்சி மவுனகுரு சுவாமிகளிடம் வருவோம்... சுவாமிகளின் சித்து விளையாட்டுகள் வெளியே தெரிய வேண்டிய வேளை வந்தது. வல்லம்பட்டிக்குத் தென்கிழக்கே கரந்தமலை என்னும் இடத்தில் ஐயனார் கோயில் ஒன்று இருந்தது. சுமார் ஆறு மாதங்கள் அங்கேயே தங்கி யோகப் பயிற்சிகளை மேற்கொண்டார். அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு. செங்குறிச்சியின் சேரிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றார். எவரது அனுமதியையும் எதிர்பார்க்காமல் ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார் சுவாமிகள். குடிசை வீட்டுக்குள் இருந்தவர்கள் அதிர்ந்தனர். காரணம் - சுவாமிகளையும் அவரது குடும்பத்தினரையும் நன்றாக அறிந்தவர்கள் அவர்கள். சோழிய செட்டியார் இனத்தைச் சேர்ந்த தாங்கள் எங்கள் வீடுகளுக்கு வரக் கூடாது என்று அன்புடன் சொன்னார்கள். இல்லறச் சட்டையையே துறந்தவருக்கு சாதியச் சட்டையா சங்கடம் ஏற்படுத்தும்? சிரித்தார். பிறகு, அந்த வீட்டிலேயே அமர்ந்தார். குடும்பத்தினர் நெளிந்தார்கள். தவத்திலும் யோகத்திலும் திளைக்கும் சுவாமிகள் ஒருவர் தங்கள் வீட்டுக்கு வந்திருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும். உள்ளூர பயந்தார்கள். அப்போது, எனக்குப் பசிக்கிறது. சாப்பாடு கொடுங்கள் என்றார் சுவாமிகள்.
ஐயா.... உங்களுக்கு நாங்கள் சாப்பாடு தரக் கூடாது. மாமிசத்தை உண்பவர்கள் நாங்கள் என்று நாசூக்காக மறுத்தனர். கேட்கும் சுபாவமா சுவாமிகளுக்கு? சாப்பாடு வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகே சென்றார். தரையை சுத்தும் செய்து ஒரு இலையை விரித்தார். பாத்திரத்தில் இருந்து சிறிது சாதத்தை இலையில் போட்டார். மாமிசத் துண்டுகள் கலந்த குழம்பை அதில் கலந்தார். நிம்மதியாக ரசித்துச் சாப்பிட்டார். குடும்பத்தினர் அனைவரும் விதிர்விதிர்த்து நின்றிருந்தபோது, என்ன, பாக்கிறீங்க... எப்படி நான் இதை எல்லாம் சாப்பிடறேன்னு கவலையா? நான் என்ன சாப்பிட்டேன்னு காட்டறேன். என் அருகே வாங்க என்று சொன்னதும். அந்தக் குடும்பத்தில் இருந்தவர்கள் சுவாமிகளின் அருகே பயப்பக்தியுடன் வந்து அமர்ந்தனர். அப்போது சுவாமிகள் தன் வாயைத் திறந்து காட்டவும். உள்ளே - உணவு அனைத்தும் மல்லிகை மலர்களாகக் காட்சி கொடுத்தன. பிரமித்துப் போன அந்தக் குடும்பத்தினர். சுவாமிகளின் கால்களில் விழ. அவர்களை ஆசிர்வதித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். சுவாமிகள். காடு மலை என்று சுற்றித் திரிந்தார். ஒரு நாள் முருகப்பெருமானே சுவாமிகள் எதிரில் தோன்றி, திருமலைக்கேணியில் உள்ள கோயிலின் அடையாளங்களைச் சொல்லி, நீ அங்கே போய் உட்கார். உன்னால் அங்கே ஆகவேண்டிய பணிகள் உள்ளது என்று சொல்லி மறைந்தார். முருகப் பெருமானின் உத்தரவுகிணங்க, நேராக திருமலைக்கேணி ஸ்ரீமுருகன் கோயிலுக்கு வந்தார். இவர் வந்த வேளையில் அந்த கோயில் கவனிப்பார் இல்லாமல் - முறையான வழிபாடுகள் இல்லாமல் பாழ்பட்டு இருந்தது. இதைக் கண்டு வருந்தினார். சுவாமிகள் முருகப் பெருமானை தியானித்து விட்டு, கோயில் வடபுறம் அமைந்துள்ள ஒரு சிறு கல்பாறையில் புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்து தியானத்தை மேற்கொண்டார். இந்தக் கல்பாறை இன்றும் பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.
இப்படி தியானம் மேற்கொண்டு வந்த காலத்தில் வள்ளி, தெய்வானை ஆகிய இருவரையும் இங்கு தரிசிக்கும் பேறு பெற்றார் சுவாமிகள். ஒரு நாள் வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய இருவரும் சாதாரண பெண்கள் வடிவில் சுவாமிகளுக்கு எதிரே தோன்றினர். இவருக்கு முன்பாக நின்று, சுவாமீ..... நாங்கள் தினைமாவு சாப்பிட்டு வந்தோம். இப்போது தாகம் நாக்கை வறட்டுகிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்று ஒருமித்த குரலில் கேட்டனர். நிமிர்ந்து பார்த்த சுவாமிகள், அதோ, ஸ்ரீசுப்பிரமண்ய் கோயிலுக்குத் தென்புறம் தீர்த்தம் அமைந்துள்ளது. அங்கே போய் அருந்துங்கள் என்றார். அதற்கு அவர்கள், அங்கே தீர்த்தம் இருப்பது எங்களுக்கு தெரியும். தங்களது திருக்கரங்களால் தீர்த்தம் கொடுங்கள் என்று கெஞ்சலாகக் கேட்க... தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து, தனக்குப் பக்கத்தில் - தரையில் ஓரிடத்தில் கைகளால் பள்ளம் பறித்தார். என்னே ஆச்சிரியம்.... பீறிட்டு வந்தது பளிங்கு போன்ற நீர்! பிறகு, அந்த நீரை சுவாமிகள் இருவருக்கும் கொடுக்க, அதை அருந்தியவர்கள் அடுத்த கணமே அங்கிருந்து மாயமானார்கள். இந்தத் தீர்த்தத்தை இன்றும் நாம் தரிசிக்கலாம். பக்தர்களை இந்தத் திருமலைக்கேணி கோயிலுக்கு வரவழைக்க வேண்டும் என்பதற்காக 1914-ஆம் வருடம் தைப்பூச தினத்தில் திண்டுக்கல் குப்புசாமி ஐயங்கார் குடும்பத்தாரைக் கொண்டு திருமலைக்கேணி முருகப் பெருமான் கோயில் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார் சுவாமிகள். இதன் பிறகு, இந்தக் கோயில் பற்றி வெளி உலகத்துக்கு மெள்ளத் தெரிய ஆரம்பித்தது.
தன் கணவர் (ஸ்ரீகாமாட்சி மவுனகுரு சுவாமிகள்) வீட்டை விட்டு வெளியேறிப் பல காலம் ஆன பிறகு, அவர் திருமலைக்கேணி முருகப் பெருமான் கோயில் இருப்பதைக் கேள்விப்பட்ட செம்பாயி அம்மாள். அவரைச் சந்தித்துப் பேசி வீட்டுக்கு அழைத்து வந்துவிடலாம் என்று எண்ணி, தனக்கு வேண்டப்பட்ட நான்கு பெண்களுடன் ஒரு முறை திருமலைக்கேணி வந்தார். கோயில் வாசல் படிக்கட்டில் தன் கணவர் அமர்ந்திருப்பதைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினார் செம்பாயி அம்மாள். எப்படியாவது வீட்டுக்கு வந்து விடுங்கள் என்று அவர் மனைவியும் உடன் வந்த பெண்களும் சுவாமிகளிடம் வேண்ட... அடுத்த கணம் சுவாமிகள் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து நின்றிருந்தது. சுவாமிகளை அங்கே காணவில்லை. அதன் பிறகுதான், தன் கணவரின் தவ வலிமையையும் அவரது நிலைப்பாட்டையும் உணர்ந்த செம்பாயி அம்மாள். நல்ல பாம்பை வணங்கிவிட்டு, முருகப் பெருமானையும் தரிசித்துவிட்ட, உடன் வந்த பெண்களுடன் அங்கிருந்து புறப்பட்டார். ஒரு முறை சுவாமிகளின் பக்தர்கள் சிலர் காசிக்குச் சென்று ஸ்ரீவிஸ்வநாதரைத் தரிசிக்க விருப்பம் கொண்டார்கள். தங்களது இந்த யாத்திரையில் சுவாமிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று அவரிடம் விண்ணப்பித்தார்கள். இருந்த இடத்தில் இருந்தபடியே காசியைக் காட்ட வல்லவர் இந்த சுவாமிகள் என்பதை அந்த பக்தர்கள் அறிந்திருக்கவில்லை. அடேய்... காசிக்குப் போய்த்தான் விஸ்வநாதரை தரிசிக்க வேண்டுமா? மெனக்கெட வேண்டாம். வயல் வேலைகளை விட்டு விட்டு அங்கே ஏன் செல்கிறீர்கள்? காசி தரிசனத்தை உங்களுக்கு இங்கேயே காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டுத் தன் வலது உள்ளங்கையை அவர்களுக்கு முன் நீட்டினார். பிறகு, காசியை நன்றாக தரிசியுங்கள் என்று அவர்களிடம் சொன்னார்.
சுவாமிகளின் வலது உள்ளங்கையப் பார்த்த அந்த பக்தர்கள் பிரமித்துப் போனார்கள். வீடியோ காட்சி மாதிரி சுவாமிகள் உள்ளங்கையில் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் கங்கையும் ஏராளமான பக்தர்கள் அங்கே புனித நீராடுவதையும் ஸ்ரீகாசி விஸ்வநாதருக்கு ஆரத்தி நடப்பதையும் ஸ்ரீவிசாலாட்சி அன்னைக்கு தீபாராதனை காண்பிக்கும் காட்சியையும், ஜொலிக்கும் அன்னபூரணி கோயில் மாறி மாறி தரிசித்து நெக்குருகிப் போனார்கள் அந்த பக்தர்கள். சாமீ.... உங்களோட தவ வலிமை தெரியாமல். எங்களில் நீங்களும் ஒருத்தரா நினைச்சு காசிக்குக் கூப்பிட்டுவிட்டோம். எங்களை மன்னிச்சிடுங்க சாமீ என்று அவரது கால்களில் விழுந்தனர். அனைவரையும் ஆசிர்வதித்துப் பிரசாதம் கொடுத்து அனுப்பினார் சுவாமிகள்.
ஒவ்வொரு வருடமும் திருமலைக்கேணியில் தைப்பூச விழா நடக்கும் முன்னதாக சுவாமிகளே அக்கம்பக்கத்து ஊர்களுக்குச் சென்று பலரையும் கோயிலுக்கு வருமாறு அழைப்பது வழக்கம். அப்படி ஒரு தைப்பூச விழா பற்றித் தன் பக்தர்களுக்குத் தகவல் சொல்வதற்காகத் திண்டுக்கல் சென்றிருந்தார். சுவாமிகள் அப்போது சுவாமிகளைச் சந்தித்த இரண்டு பக்தர்கள். அன்றைய மதிய உணவுக்குத் தங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். சுவாமிகள் குழம்பினார். யாராவது ஒருவர் வீட்டில்தானே உண்ண முடியும்? அதுவும் மதிய வேளை உணவுக்கு இப்படி இரண்டு பேரும் கூப்பிடுகிறீர்களே.... இருவரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்களேன் என்று அவர்களிடமே கேட்டார். ஆனால், அந்த இருவருமே விட்டுக் கொடுப்பதாக இல்லை. தங்கள் விட்டு மதிய உணவுக்கு சுவாமிகள் அவசியம் வர வேண்டும் என்று அன்புத் தொல்லை கொடுத்தனர். சரி.... ரெண்டு பேர் வீட்டிலும் உணவு தயார் செய்யுங்கள். பார்க்கலாம் யார் வீட்டுக்கு வர முடிகிறதோ. வருகிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். என் வீட்டில் சுவாமிகளுக்குப் பிரதமாதமான விருந்து வைத்து அசந்துப் போகிறேன். பார் என்று ஒருவர் மற்றவரிடம் சொல்லி விட்டு, இரண்டு அனபர்களுமே விருந்து தயார் செய்யப் புறப்பட்டனர். சுவாமிகள் எப்படியும் நம் வீட்டுக்குத்தான் வருவார். அவன் வீட்டுக்குப் போக மாட்டார் என்று இருவருமே எண்ணினார்கள். ஆனால் சுவாமிகளின் சித்து வேலைகள் அவர்களுக்குத் தெரியுமா, என்ன?
மதிய வேளை, இருவரது வீட்டிலும் ஒரே நேரத்தில் நுழைந்தார் சுவாமிகள். யப்பா.... நல்லவேளை .... சுவாமிகள் நம் வீட்டுக்கு வந்துவிட்டார் என்று இருவரும் தனித் தனியே தங்கள் வீடுகளில் சந்தோஷப்பட்டனர். சுவாமிகளுக்குப் பாத பூஜை செய்து. ஆசனத்தில் அமர வைத்து. தலைவாழை இலை போட்டு விருந்து படைத்தனர். திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு. குடும்பத்தினரை ஆசிர்வதித்துவிட்டு, திருமலைக்கேணிக்குப் புறப்பட்டு போனார் சுவாமிகள். அன்று மாலை அந்த இரு நண்பர்களும் கடைத் தெருவில் சந்தித்தனர். என்னப்பா.... உன் வீட்டுக்கு சுவாமிகள் வராமல் ஏமாற்றி இருப்பாரே... என் வீட்டில் அவருக்கு இன்று தடபுடல் விருந்து வைத்து அமர்க்களப்படுத்திவிட்டேன் என்றார் முதல் அன்பர். இதைக் கேட்ட இரண்டாவது அன்பர் கேலியாகச் சிரித்து. ஏம்ப்பா... என் வீட்டுக்குத்தாம்ப்பா வந்தார். பாத பூஜை செய்து, நானே என் கையால் அவருக்கு உணவு பரிமாறினேன் என்று சொல்ல.... ஒரு கட்டத்தில் இருவரும் குழம்பினர். பிறகுதான், அவர்களுக்கு சுவாமிகளின் சித்து விளையாடல் புரிந்தது. 1917-ஆம் ஆண்டு பிங்கள வருடம் ஆடி மாதம் 17-ஆம் தேதி செவ்வாய்கிழமை இரவு 11 மணி அளவில் தன்னுடைய தவ பலத்தால். ஜீவ சமாதி நிலையை அடைந்தார் ஸ்ரீகாமாட்சி மவுனகுரு சுவாமிகள். எனக்கு என்றும் இயல்பு இல்லை. என்றைக்கும் நான் இங்கேயே வீற்றிருந்து என்னைத் தேடி வரும் பக்தர்களைக் காத்து அருள் புரிவேன் என்று ஜீவ சமாதி ஆவதற்கு முன் சுவாமிகள் சொன்னதாக அவரது பக்தர்கள் தெரிவித்தார்கள். இதனால்தானோ என்னவோ... என் மனைவி, அவளுடைய ஆயுள் முழுதும் திருமாங்கல்யம் அணிந்திருக்க வேண்டும். என்று தான் சமாதி ஆகும்போது சொல்லி இருந்தார்.
எனவே சுவாமிகள் இன்றைக்கும் சூட்சும உருவில் இங்கு இருந்து வருவதாக அவரது பக்தர்கள் திடமான நம்பிக்கையில் வந்து தரிசிக்கிறார்கள். சுவாமிகள் பயன்படுத்திய தண்டம், திருவடி, உபயோகப்படுத்திய ஓலைப் பெட்டிகள் போன்றவற்றை இங்கே தரிசிக்கலாம். நவக்கிரகம் விநாயகர் சன்னிதிகளும் உண்டு. திருமலைக்கேணி திருப்பணிகளுக்கு வாரியார் சுவாமிகள் ஒரு முறை விஜயம் செய்திருக்கிறார். தற்போது இந்த திருமலைக்கேணி மடத்தை நிர்வகித்து வருபவர் சச்சிதானந்த சுவாமிகளின் சிஷ்யரான முத்துகோபாலகிருஷ்ண சுவாமிகள் என்பவர். என்றாலும், மடத்தின் பெரும்பாலான பொறுப்புகளை அங்கேயே இருந்து கவனித்து வருபவர்-கா.கு. பிச்சை என்கிற முருகேசன் என்பவர். இவர் காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் பேரன். காமாட்சிமவுனகுரு சுவாமிகளின் மகனான குப்புசாமியின் மகன்தான் முருகேசன். குருபூஜை தினங்கள் தவிர, ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி தினத்தன்றும் அன்னதானத்துடன் அபிஷேக-அலங்காரங்கள் நடைபெறுகின்றன. முருகனருள் பெற்ற காமாட்சி மவுனகுரு சுவாமிகளை திருமலைக்கேணியில் தரிசித்து குருவருள் பெறுவோம்!
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருமலைக்கேணி. நத்தத்தில் இருந்து மணக்காட்டூர் வழியாக திருமலைக்கேணி வந்தால் 24 கி.மீ. 1 திண்டுக்கல்லில் இருந்து செந்துறைக்குச் செல்லும் புறநகர் பேருந்துகள் திருமலைக்கேணி வழியாகச் செல்லும்.
செந்துறையில் இருந்து திருமலைக்கேணி வழியாகப் பழநி செல்லும் தடமும் உண்டு. செந்துறையில் இருந்து திருமலைக்கேணிக்கு சுமார் 15 கி.மீ. தொலைவு. செங்குறிச்சியில் இருந்து திருமலைக்கேணிக்கு 2 கி.மீ. தொலைவு.
திண்டுக்கல்லில் இருந்து செங்குறிச்சி செல்லும் நகரப் பேருந்து தடம் எண்: 2ஏ, 2பி ஆகியவை திருமலைக்கேணி வழியாகச் செல்லும். செந்துறையில் இருந்து திருமலைக்கேணிக்கு பேருந்து வசதி உண்டு. திண்டுக்கல்லில் இருந்து திருமலைக்கேணி வழியாக துவரங்குறிச்சி செல்லும் பேருந்துகளும் உண்டு.
தொடர்புக்கு:
திருமலைக்கேணி ஜீவசமாதி மடம்,
செங்குறிச்சி அஞ்சல், சிலுவத்தூர் வழி,
திண்டுக்கல் மாவட்டம் - 624 306.